இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோனுக்கு எதிராக கடும் விமர்சனத்தை முன்வைத்துள்ள மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ், தேசபந்து தென்னக்கோனை திட்டமிடப்பட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் குழுவின் தலைவருக்கு சமமானவர் என்று நீதிமன்றத்தில் அறிவித்திருக்கிறார்.

சந்தேகநபராக தேசபந்து தென்னக்கோன் நீதிமன்றத்துக்கு ஆஜரான விதம் தொடர்பிலும் கடும் எதிர்ப்பை முன்வைத்துள்ளார்.

தேசபந்து தென்னக்கோன் நேற்று (19/03/2025) மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்த நிலையில், இதுதொடர்பான வழக்கு விசாரணை மாத்தறை நீதவான் அருண புத்ததாச முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இந்த வழக்கு விசாரணையின்போது தேசபந்து தென்னக்கோனின் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி சானக்க ரணசிங்க கருத்து முன்வைத்திருந்தார்.

ஜனாதிபதி சட்டத்தரணி சானக்க ரணசிங்க : எனது கட்சிக்காரருக்கு பிணை வழங்குவதா இல்லையா என்பது தொடர்பான உத்தரவை நீதிமன்றம் பரிசீலனை செய்ய வேண்டியுள்ளது.

பிணையை நிராகரிப்பது என்றால் சந்தேகநபரொருவர் நீதிமன்றத்துக்கு ஒத்துழைப்பு வழங்காமல் நீதிமன்றத்தை புறக்கணித்தல் அல்லது சாட்சியாளர்களுக்கு அச்சுறுத்தல் விடுத்துள்ளமை உறுதிப்படுத்தப்பட வேண்டும். இருந்தபோதும் மேன்முறையீட்டு சட்ட உதவி நிராகரிக்கப்பட்டதன் பின்னரான முதலாவது சந்தர்ப்பத்திலேயே இந்த நீதிமன்றத்துக்கு வந்திருக்கிறார்.

உயர் நீதிமன்றத்தினூடாக அவருடைய பணிக்கு இடைக்கால தடைவிதிக்கப்பட்டிருந்தாலும், அவர் இன்னும் நாட்டின் பொலிஸ் மா அதிபராவார். பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டதன் பின்னர் பாதாள மற்றும் போதைப்பொருள் வியாபாரத்துக்கு எதிராக சட்டத்தின் பெயரில் யுத்தம் செய்தார். ஆதனால் அவருக்கு உயிர் அச்சுறுத்தல் இருக்கிறது. ஒருவேளை அவருக்கு விளக்கமறியல் வழங்கப்பட்டால் அவருக்கு உயிர் அச்சுறுத்தல் ஏற்படுவதற்கான வாய்ப்பு இருக்கிறது.

அதன்காரணமாக ஏதாவது நிபந்தனையின் அடிப்ப டையில் எனது கட்சிக்காரரை பிணையில் விடுவிக்க வேண்டும் என்று கோருகிறேன்.

அதனைத் தொடர்ந்து முறைப்பாடு தொடர்பில் கருத்து தெரிவித்த மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ்: பகிரங்க பிடியாணை விடுக்கப்பட்டுள்ள சந்தேகநபரொருவர் டை, கோர்ட் அணிந்துகொண்டு பென்ஸ் வகை காரில் நீதிமன்ற மண்டப கதிரையில் அமர்ந்திருப்பதாக இன்று காலை நான் அறிந்துகொண்டேன். அதன் காரணமாகவே சட்ட மா அதிபரின் சார்பில் நான் நீதிமன்றத்துக்கு வருகை தந்துள்ளேன்.

நகர்த்தல் பத்திரம் தொடர்பில் எங்களுக்கு அறிவிக்காமல் கூட திருட்டுப் பூனையை போன்று நீதிமன்றத்துக்கு வந்து பாழடைந்த வீட்டில் பானையை உடைத்து பிணை எடுத்துச் செல்ல முடியும் என்று எண்ணினாரோ தெரியவில்லை.

பகிரங்க பிடியாணை விடுக்கப்பட்ட நபரொருவர் சாட்சிக் கூண்டுக்கு வராமல் எதற்காக கதிரையில் அமர்ந்தி ருக்கிறார் என்பதை அறிந்துகொள்ள விரும்புகிறேன். குற்றம் செய்த ஒருவர் சிங்கக் குகையிலிருந்து வந்து இவ்வாறு கதிரையில் அமர்ந்திருக்க முடியாது.

தொலைபேசியை ஓப் செய்துவிட்டு, இரகசிய நடவடிக்கை, ஏமாற்று வேலைசெய்து 20 நாட்கள் நீதிமன்றத்தை புறக்கணித்து தலைமறைவாகியிருந்த இவர் சிறந்த நடிகராவார். இவர் பொலிஸ் மா அதிபராக இருந்தபோது சட்டத்தரணிகளே குற்றவாளிகளை பாதுகாப்பதாக கூறியிருந்தார். அவ்வாறு கூறிய அவருக்கு இன்று சட்டத்தரணிகள் சூழ நீதிமன்றத்துக்கு வரவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இது W-5 ஹோட்டலுக்கு துப்பாக்கிச் சூடு நடத்திய வழக்கு விசாரணை இல்லை. கர்மவினை தொடர்பான வழக்காகும். அவர் செய்த கர்மமே இந்த பிறவியிலேயே பலனை கொடுத்துள்ளது.

நீதிமன்றத்தினூடாக கடந்த மாதம் 27ஆம் திகதி பிடியாணை பிறப்பிக்கப்பட்டது. முதல் பிரபாகரனை தேடுவது போன்று பெரும் சேனைகளினூடாக அவரை தேடி சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. நேற்று அவரது வீட்டை சோதனைக்கு உட்படுத்திய போது அங்கிருந்து வெளிநாட்டு மதுபான போத்தல்கள் 796 கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இந்த போத்தல்களின் பெறுமதி பல கோடி ரூபாவாகும். அது வீடல்ல. அதுவொரு களிப்பு விடுதி. எனக்கு விளக்கமறியல் வழங்க வேண்டாம் உயிர் அச்சுறுத்தல் இருப்பதாக கூறும் அவர், அவரது கடமை துப்பாக்கியை துணியில் மறைத்துவிட்டு 20 நாட்கள் தலைமறைவாகியிருந்தார். அவரின் பெயரில் எந்தவொரு சொத்தும் இல்லாவிட்டால் இவருக்கு மாத்திரம் உத்தியோகபூர்வமற்ற 8 வீடுகள் இருக்கின்றமை உறுதியாகியுள்ளது. அதன் காரண மாகவே பாதாள குழுத் தலைவர்களான மதுசவுகும் அரக் கட்டாவுக்கும் இதுபோன்று சூட்சுமமாக செயலாற் றியிருக்க முடியாது என்று கூறுகிறேன்.

நாட்டின் பொலிஸ் மா அதிபர் என்று கூறிக்கொள்ளும் இவர் அல்லது அவரின் குடும்பத்தைச் சேர்ந்தவர்களின் பெயரில் எவரும் 2021ஆம் ஆண்டிலிருந்து வாக்காளர் இடாப்பில் இல்லை. He is Ghost. இவர் ஒரு மர்மமான நபர் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here