மட்டு வவுணதீவு பிரதேசத்தில் மாடுகளை திருடிய நபர் ஒருவரை பொதுமக்கள் மடக்கி பிடித்து நையப்புடைப்பு செய்த நிலையில் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் செவ்வாய்கிழமை (25/03/2025) அதிகாலை ஒரு மணிக்கு உயிரிழந்துள்ளதாகவும் அவரை இதுவரை அடையாளம் காணப்படவில்லை எனவும் அடையாளம் தெரிந்தவர்கள் தொடர்பு கொள்ளுமாறும் பொது மக்களிடம் பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த 15 ம் திகதி வவுணதீவு பொலிஸ் பிரிவிலுள்ள புதுமண்டபத்தடி பிரதேசத்தில் மாடு திருடிய இளைஞன் ஒருவரை பொதுமக்கள் மடக்கி பிடித்து நையப்புடைப்பு செய்த பின்னர் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.
இதனையடுத்து அவரை மட்டு போதனா வைத்தியசாலையில் அனுமதித்ததுடன் அவருக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தாக்குதல் செய்ததையடுத்து அவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்ட நிலையில் சிகிச்சை பெற்றுவரும் அவரை சிறைச்சாலை நிர்வாகம் பெறுப்பேற்று சிறைச்சாலை அதிகாரிகளின் பாதுகாப்பில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
இந்த நிலையில் குறித்த நபர் சம்பவதினமான செவ்வாய்க்கிழமை அதிகாலை ஒரு மணிக்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் எனவும் உயிரிழந்தவர் இதுவரை அடையாளம் காணப்படவில்லை எனவும் இவர் தொடர்பாக தகவல் தெரிந்தவர்கள் தொடர்பு கொள்ளுமாறும் பொதுமக்களிடம் பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.
[மட்டக்களப்பு நிருபர் – கனகராசா சரவணன்]








