நாட்டின் 15 மாவட்டங்களில் இதுவரை 21,439 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக சமூக மருத்துவ ஆலோசகர் வைத்தியர் பிரஷீலா சமரவீர தெரிவித்துள்ளார்.
இவர்களில் 45% மேல் மாகாணத்திலேயே பதிவாகியுள்ளதாகவும், 10 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கொழும்பு, கம்பஹா, இரத்தினபுரி, மட்டக்களப்பு, கண்டி, மாத்தறை, காலி, திருகோணமலை, குருநாகல் மற்றும் கல்முனை ஆகிய பகுதிகளில் அதிக தொற்றுகள் காணப்பட்டுள்ளன.
40,000 இடங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில் 10,600க்கும் மேற்பட்ட இடங்கள் நுளம்பு பெருகக்கூடிய பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன. 1,407 இடங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன், 347 இடங்களில் சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
பள்ளிகள், மத இடங்கள் மற்றும் கட்டுமானத் தளங்கள் நுளம்புகள் பெருகும் முக்கியமான இடங்களாக இருப்பதால், பொதுமக்கள் சுற்றுப்புறங்களை சுத்தம் செய்ய வேண்டும் என சுகாதாரவியல் அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.








