அரச செலவுகளை கட்டுப்படுத்துதல் மற்றும் எரிபொருள் சேமிப்புக்காக கடுமையான நடவடிக்கைகளை அமுல்படுத்த பாகிஸ்தான் அரசு தீர்மானித்துள்ளது.

இதற்கமைய இன்று (17) வெளியிடப்பட்ட அமைச்சரவைப் பிரிவின் அறிவிப்பின்படி, அரச வாகனங்களுக்கு ஒதுக்கப்படும் எரிபொருள் அளவு 50% ஆல் குறைக்கப்பட்டுள்ளது.

எனினும் ஆயுதப்படைகள், சட்ட அமுலாக்க நிறுவனங்கள், அத்தியாவசிய சேவைகள் மற்றும் பெடரல் வருவாய் சபையின் செயற்பாடுகளுக்கு இந்த வரம்பு பொருந்தாது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த அறிவிப்பின்படி 2026/27 நிதியாண்டுக்காக மீண்டும் எழாத செலவுகளை, வரவு செலவு திட்டத்தில் இருந்து மாதாந்தம் 5% ஆல் குறைக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

புதிய வாகனங்கள் கொள்வனவு மற்றும் சில நீண்ட கால பொருட்கள் கொள்வனவும் தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளதுடன், அபிவிருத்தி திட்டங்களுக்கு இந்த வரம்புகள் பொருந்தாது எனவும் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வெளிநாட்டு பயணங்கள் 3 மாத காலத்திற்கு இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன், அத்தியாவசிய பயணங்களை மேற்கொள்ள வேண்டியிருந்தால் அமைச்சர்கள், ஆலோசகர்கள் மற்றும் ஏனைய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விமானங்களில் சாதாரண பயணிகள் பயணிக்கும் வகுப்பில் (Economy Class) பயணிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அரச நிறுவனங்களின் கூட்டங்களை கூடுமானவரை தொலைதூர மாநாட்டு (Virtual) முறை மூலம் நடத்தவும், வெளிநாட்டு தூதுக்குழுக்கள் வரும் சந்தர்ப்பங்களைத் தவிர அரச உத்தியோகபூர்வ விருந்துகளை நடத்த வேண்டாம் எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அரச பணத்தில் நடத்தப்படும் உத்தியோகபூர்வ மாநாடுகள், பயிற்சி திட்டங்கள் மற்றும் கருத்தரங்குகளும் தடை செய்யப்பட்டுள்ளதுடன், அத்தியாவசிய சந்தர்ப்பங்களில் அரச கேட்போர் கூடங்கள், குழு அறைகள் மற்றும் ஏனைய உத்தியோகபூர்வ வசதிகளை பயன்படுத்துமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு மேலதிகமாக திருமண விழாக்கள் மற்றும் அது சார்ந்த நிகழ்வுகளில் ஒரு வகை உணவு மட்டுமே வழங்கப்பட வேண்டும் எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் பாகிஸ்தானில் வணிக மற்றும் வர்த்தக நிறுவனங்களுக்கு தற்போது நடைமுறையில் உள்ள கடைகளை மூடும் நேரங்கள் தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி சாதாரண கடைகள், சந்தைகள் மற்றும் வணிக வளாகங்கள் இரவு 9 மணிக்கும், விழாக்கள் நடைபெறும் இடங்கள் இரவு 10 மணிக்கும் மூடப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உணவகங்கள், கஃபேக்கள் மற்றும் உணவு விற்பனை நிலையங்கள் இரவு 11.00 மணி வரை திறந்திருக்கலாம், மேலும் Takeaway மற்றும் Home Delivery சேவைகளுக்கு அந்த வரம்பில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

மருந்தகங்கள், வைத்தியசாலைகள், கிளினிக்குகள், மருத்துவ பொருட்கள் விற்பனை நிலையங்கள், எரிபொருள் நிரப்பு நிலையங்கள், மின்சார வாகன சார்ஜ் நிலையங்கள், உடற்பயிற்சி மற்றும் விளையாட்டு வசதிகள் உள்ளிட்ட சில சேவைகளுக்கு இந்த வரம்பில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கைகளை அமுல்படுத்துவது தொடர்பில் தேவையான சந்தர்ப்பங்களில் தனித்தனி சம்பவங்கள் அடிப்படையில் விலக்குகளை பரிசீலிக்க முடியும் எனவும் பாகிஸ்தான் அரசு குறிப்பிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here