இந்தியாவில் ட்ரோன் மூலம் ஆயுத அமைப்புகளுக்கு பயிற்சி வழங்கியதாக சந்தேகிக்கப்படும் 7 வெளிநாட்டு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதில் 6 உக்ரைன் பிரஜைகளும் ஒரு அமெரிக்கரும் அடங்குவதாக பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்த வழக்கை இந்தியாவின் தேசிய விசாரணை நிறுவனம் (NIA) விசாரித்து வருகிறது. கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் டெல்லியில் உள்ள விசேஷ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். நீதிமன்றம் அவர்களை 11 நாட்கள் காவலில் வைக்க அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து விசாரணை அதிகாரிகள் தெரிவித்ததாவது, இந்த குழு இந்தியாவின் வடகிழக்கு பகுதிகளில் அனுமதி இல்லாமல் நுழைந்து பின்னர் மியன்மார் எல்லைப் பகுதிகளுக்கு சென்றதாக சந்தேகிக்கப்படுகிறது. அங்கு உள்ள ஆயுத அமைப்புகளுடன் தொடர்பு கொண்டு ட்ரோன் பயன்படுத்தும் பயிற்சிகளை வழங்கியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
மேலும், ஐரோப்பாவில் இருந்து ட்ரோன்களை வாங்கி அவற்றை பயிற்சி மற்றும் செயல்பாடுகளுக்காக பயன்படுத்த முயன்றதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளது. அமெரிக்கா தனது குடிமகன் கைது செய்யப்பட்டதை உறுதிப்படுத்தியுள்ளதுடன், உக்ரைன் தனது நாட்டைச் சேர்ந்த நபர்களுக்கு தூதரக அணுகலை கோரியுள்ளது.
இந்த சந்தேக நபர்களுக்கு இந்தியாவின் பயங்கரவாத தடுப்பு சட்டங்களின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.








