அமெரிக்காவுடனான அனைத்துப் பிரச்சினைகளையும் ஒரு மாதத்திற்குள் தீர்க்க விரும்புவதாக ஈரான் தெரிவித்துள்ளது.
14 அம்சத் திட்டத்தை முன்வைத்து, அமெரிக்காவிற்கும் தமக்கும் இடையிலான மோதல்களை 30 நாட்களுக்குள் தீர்க்க வேண்டும் என்றும், குறித்த திட்டம், போர் நிறுத்தத்தை நீடிப்பதற்குப் பதிலாக போரை முடிவுக்குக் கொண்டுவருவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்றும் ஈரான் அழைப்பு விடுத்துள்ளது.
அமெரிக்காவின் ஒன்பது அம்சத் திட்டத்திற்கு பதிலாக முன்வைக்கப்பட்டுள்ள இந்தத் திட்டம், ஈரான் மீதான தடைகளை நீக்கவும், அதன் கடற்படை முற்றுகையை முடிவுக்குக் கொண்டுவரவும், அப்பகுதியிலிருந்து தனது படைகளைத் திரும்பப் பெறவும், லெபனானில் இஸ்ரேல் நடத்தும் போர் உட்பட அனைத்துப் போர் நடவடிக்கைகளையும் நிறுத்தவும் அமெரிக்காவைக் கோருகிறது என்று ஈரானின் பாதுகாப்பு அமைப்புகளுடன் நெருங்கிய தொடர்புகளைக் கொண்ட ஈரானின் ‘நூர் நியூஸ்’ தெரிவித்துள்ளது.
கடந்த வாரம் ஈரான் முன்வைத்த திட்டத்தை ட்ரம்ப் நிராகரித்தார், எவ்வாறாயினும், பேச்சுவார்த்தைகள் தொடர்கின்றன, மூன்று வார கால போர் நிறுத்தம் தற்பொழுது நடைமுறையில் உள்ளது.
மேலும் இன்று, ஈரானிய வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அராக்சி, போருக்கு முன்பு அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான முந்தைய சுற்றுப் பேச்சுவார்த்தைகளை மேற்பார்வையிட்ட ஓமன் வெளி விவகார அமைச்சர் பத்ர் அல்-புசைதியுடன் பேசினார்.
.








