சமூகப் பாதுகாப்பு பங்களிப்பு வரி அதிகரிப்பு (SSCL) மற்றும் அமெரிக்க டொலருக்கு நிகராக இலங்கை நாணயத்தின் மதிப்பு தொடர்ச்சியாக குறைந்தமை காரணமாக, இலங்கையில் இறக்குமதி செய்யப்படும் வாகனங்களின் விலைகள் மே முதலாம் திகதி முதல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வரிவிதிப்பு மற்றும் நாணய மதிப்பின் ஏற்ற இறக்கங்களின் ஒருங்கிணைந்த தாக்கம், பிரபலமான வாகன மொடல்களின் சில்லறை விலைகளை கணிசமாகப் பாதிக்கும் என இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் பிரசாத் மனேஜ் கூறியுள்ளார்.
தற்போதைய நிலைமையில் ஹொண்டா வெசல் வாகனத்தின் விலை சுமார் ரூ. 300,000 வரையிலும், டொயோட்டா ரைஸ் வாகனத்தின் விலை ஏறத்தாழ ரூ. 250,000 வரையிலும் அதிகரிக்க கூடும். அதே நேரத்தில், சுசுகி வெகன் ஆர் வாகனத்தின் விலை சுமார் ரூ. 150,000 வரை அதிகரிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவுகளால் பாதிக்கப்பட்டுள்ள நுகர்வோர் மீது இந்த விலை அதிகரிப்புக்கள் மேலதிக அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடும் என்றும், அதே சமயம் வாகனச் சந்தையில் தேவையையும் குறைக்கக்கூடும் என்றும் வாகன இறக்குமதியாளர்கள் எச்சரித்துள்ளனர்.








