சிறுவர்களுக்காக பிரத்தியேகமாக உருவாக்கப்பட்டு தற்போது சிறுவர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான அனிமேஷன் சேனலான கார்டூன் நெட்வேர்க் திடீரென மூடப்பட்டதாக கடந்த ஒருவாரகாலமாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகி வைரலாகி வருகின்றது.
அனிமேஷன் தொழிலாளர்களின் குழு சார்பில் ‘Animation Workers Ignited’ என்ற பெயரில் எக்ஸ் தளத்தில் கணக்கு ஒன்று இயக்கி வருகிறது.
அதில் வெளியிடப்பட்டுள்ள பதிவில், “கார்ட்டூன் நெட்வொர்க் நிறுத்தப்படுகிறதா? அனிமேஷன் துறை என்ன மாதிரியான ஆபத்தை சந்தித்து வருகிறது என்பதை வெளிப்படுத்துங்கள். #RIPCartoonNetwork” என்ற ஹேஷ்டேக்கின் வழியே உங்களுக்கு பிடித்தமான கார்ட்டூனை பதிவிடுங்கள்” என தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து இந்த ஹேஷ்டேக் சமூக வலைதளங்களில் தீயாய் பரவியது. 80 – 90 கிட்ஸ்கள் பலரும் கார்ட்டூன் நெட்வொர்க் உடனான தங்களது நினைவுகளை சோகத்துடன் பதிவிட்டு வந்தனர்.
இந்த நிலையில், இந்த தகவலுக்கு கார்ட்டூன் நெட்வேர்க் சேனல் நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “கார்ட்டூன் நெட்வொர்க் மூடப்படுகிறது என்று வரும் தகவல்களில் உண்மை இல்லை என்பதை தெளிவுப்படுத்த விரும்புகிறோம். சமீபத்தில் அறிவிக்கப்பட்ட பல நிகழ்ச்சிகளுடன், உலகெங்கிலும் உள்ள எங்கள் பார்வையாளர்களை மகிழ்விக்கும் புதுமையான உள்ளடக்கத்தில் தொடர்ந்து முதலீடு செய்வதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்” என்று தெரிவித்துள்ளது.
இதை உறுதிபடுத்தும் விதமாக ஒரு அனிமேஷன் கார்டூனை உருவாக்கி தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டு அதை உறுதிபடுத்தியுள்ளது.