Tamil News Channel

சஜித் இணங்காவிடின் யானை சின்னத்தில் ஐ.தே.க களமிறங்கும்-வஜிர அபேவர்தன..!

Wajira-Abeywardana

ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்திக்கு இடையில், இணக்கப்பாடுகள் ஏற்படாவிடின் யானைச் சினத்தில் ஐக்கிய தேசிய கட்சி போட்டியிடுமென கட்சியின் தவிசாளரும் முன்னாள் எம்.பியுமான வஜிர அபேவர்தன தெரிவித்தார்.

தற்போது நடத்தப்படும் பேச்சுக்கள் வெற்றியளித்தால் எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலில் பொதுவான சின்னத்தில் போட்டியிடும் சாத்தியம் ஏற்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்நிலையில், இன்று (15) சனிக்கிழமை வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகவும் வஜிர தெரிவித்தார். ஐ.தே.க. தலைமையகமான சிறிகொத்தாவில் தொகுதி அமைப்பாளர்களுக்கான நியமனம் வழங்கும் நிகழ்வில் (12) கலந்து கொண்டு உரையாற்றுகையிலே அவர் இதனைத் தெரிவித்தார்.

ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் ஒற்றுமையை ஏற்படுத்துவதற்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முடிந்தளவு முயற்சித்தார்.

இணக்கப்பாடு எட்டப்பட்டு யானைச் சின்னத்தில் தேர்தலில் களமிறங்க வேண்டும் என்பதே எமது இலக்காகும்.

அடுத்த தெரிவு ஏதேனுமொரு உள்ளுராட்சி மன்றத்தில் ஐக்கிய தேசிய கட்சியாகவோ, ஐக்கிய மக்கள் சக்தியாகவோ அன்றி சுயாதீன சின்னமொன்றில் போட்டியிடுவதாகும்.

ஒரேயொரு ஆசனத்தை மாத்திரம் ஐ.தே.க. பாராளுமன்றத்தில் பெற்றுக் கொண்ட போது, நாம் அழிந்து விட்டதாக சிலர் எண்ணினர்.

ஆனால் அந்த ஒரு ஆசனமே இலங்கையின் 8ஆவது நிறைவேற்றதிகார ஜனாதிபதியை தெரிவு செய்தது.

எனவே தற்போது ஒரு ஆசனம் கூட இல்லையென நாம் சோர்வடைந்து விடக் கூடாது.ஒரு ஆசனம் கூட இல்லாமலும் ஜனாதிபதியாகலாம். ஐ.தே.க.பலம் மிக்கது என்பதை யாரும் மறந்து விடக் கூடாது.

மேற்குறிப்பிட்ட மூன்று யோசனைகளுக்கும் இணக்கம் தெரிவிக்கப்படாவிட்டால் இறுதியாக யானை சின்னத்தில் நாம் களமிறங்குவோம்.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts