நிதி துஷ்பிரயோக வலையமைப்பை கட்டுப்படுத்தாவிட்டால் நாடு ஒரு அங்குலம் கூட நகராது என ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க எச்சரித்துள்ளார்.
தேசிய வரி வாரத்தின் ஆரம்ப நிகழ்வு இன்று திங்கட்கிழமை (02.06.2025) ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்டு உரையாற்றிய ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் உரையாற்றிய ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க,
“மோசடியில் கட்டமைக்கப்பட்ட கறுப்புப் பொருளாதாரத்தை இல்லாது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். பொது நிதியைப் பாதுகாக்க ஒரு சட்டபூர்வமான மற்றும் பொறுப்புணர்வுள்ள அமைப்பு நிறுவப்படும்.
பொதுமக்களின் ஒவ்வொரு ரூபாயும் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்ய எனது சொந்த செலவினங்கள் முடிந்தவரை குறைக்கப்படும். வரிப் பணம் முழுமையாகப் பாதுகாக்கப்படும். யாராவது அதைத் தவறாகப் பயன்படுத்தினால், சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். அனைத்து குடிமக்களும் வரி செலுத்த வேண்டும். ஒவ்வொரு ரூபாயையும் நாங்கள் பாதுகாப்போம்.
டிஜிட்டல் மயமாக்கல் அரசு சேவைகளையும் வெளிப்படைத்தன்மையையும் மேம்படுத்தும். அரசு நிறுவனங்களுக்குள் ஆழமாக வேரூன்றிய, ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட நிதி துஷ்பிரயோக வலையமைப்பை அகற்ற வேண்டும். இந்த கட்டமைப்பை அகற்றத் தவறினால், நாடு ஒரு அங்குலம் கூட முன்னேறாது. எனவும் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
இந்த நிகழ்வில், உள்நாட்டு வருவாய்த் துறையின் வரி வருமானங்களைச் சமர்ப்பிப்பதற்கான ஒன்லைன் தளமும் அதிகாரப்பூர்வமாகத் ஆரம்பித்துவைக்கப்பட்து. “Badu Shakthi” எனும் பெயரிடப்பட்ட இந்த முயற்சி ஜூன் 7 ஆம் திகதி வரை நடைபெறும், இது 2024–2025 மதிப்பீட்டு ஆண்டில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதையும் வரி இணக்கத்தை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.








