பாகிஸ்தானின் புதிய பிரதமராக ஷெபாஸ் ஷெரீஃப் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
பாகிஸ்தானில் நாடாளுமன்ற தேர்தல் கடந்த பெப்ரவரி 8 ஆம் திகதி நடைபெற்ற நிலையில் அந்த தேர்தலில், எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.
இதனால் புதிய அரசு அமைப்பதில் குழப்பம் நீடித்து வந்தது.
இந்நிலையில், நவாஸ் ஷெரீஃபின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சியும் பிலாவல் பூட்டோவின் பாகிஸ்தான் மக்கள் கட்சியும் கூட்டணி அரசு அமைக்க முடிவு செய்தன.
இது தொடர்பில் தெரிவித்த பிலாவல் பூட்டோ பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி பிரதமர் வேட்பாளராக யாரை அறிவித்தாலும், அவருக்கு ஆதரவு தெரிவிப்போம் என்றார்.
இதற்கமைய நவாஸ் ஷெரீஃப் தனது சகோதரரும் பாகிஸ்தானின் முன்னாள் பிரதமருமான ஷெபாஸ் ஷெரீஃபை பிரதமர் வேட்பாளராக அறிவித்துள்ளார்.
இதனால் பெரும்பான்மையான எம்.பி.க்களின் ஆதரவு பெற்று ஷெபாஸ் ஷெரீஃப், பாகிஸ்தான் பிரதமராக மீண்டும் பதவியேற்க உள்ளார்.