வடமேற்கு பாகிஸ்தானில் இன்று வெள்ளிக்கிழமை பொலிஸ் வளாகத்திற்குள் வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட காரில் தற்கொலை தாக்குதல்தாரி ஒருவர் நடத்திய தாக்குதலில் குறைந்தது 16 பேர் கொல்லப்பட்டதுடன் 57 பேர் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதிகாரிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் உள்ளே இருந்த பள்ளிவாசலில் தொழுகை நடத்திக் கொண்டிருந்தபோது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
கோஹாட் நகரில் குறித்த வாகனம் வெளிப்புற சுவரில் மோதியதுடன், அதனுடன் வந்த துப்பாக்கிதாரிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 5 பொலிஸ் அதிகாரிகள் உட்பட பலர் உயிரிழந்ததாக மாகாண பொலிஸ் தலைவர் சுல்பிகர் ஹமீத் தெரிவித்தார்.
மத்திய அரசாங்கத்தை கவிழ்க்க போராடும் இஸ்லாமிய போராளிகளின் தாக்குதல்கள் அதிகரித்து வரும் எல்லை மாகாணமான கைபர் பக்துன்க்வாவில் நடந்த இந்த தாக்குதலுக்கு உடனடியாக எவரும் பொறுப்பேற்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
வெடிப்பு மற்றும் அதைத் தொடர்ந்து இடம்பெற்ற துப்பாக்கிச் சண்டையில் ஏழு தாக்குதல்தாரிகளும் கொல்லப்பட்டதாக பொலிஸார் அறிக்கை ஒன்றில் தெரிவித்தனர்
கடந்த சில மாதங்களில் பாகிஸ்தானின் எல்லைப் பகுதிகளில் போராளிகளின் செயற்பாடு கடுமையாக அதிகரித்துள்ளது, முக்கியமாக குறித்த தரப்பு இராணுவம் மற்றும் பொலிஸாரை இலக்கு வைத்துள்ளது.
பிராந்தியத்தின் முக்கிய போராளிக் குழுவான தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான், அல்லது பாகிஸ்தான் தலிபான் – இன்றைய தாக்குதலை தாங்கள் நடத்தவில்லை என அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
பாகிஸ்தானில் தாக்குதல்களை நடத்துவதற்கு போராளிகள் ஆப்கானிஸ்தானில் உள்ள பாதுகாப்பான புகலிடங்களை பயிற்சி மற்றும் திட்டமிடலுக்கு பயன்படுத்துவதாக இஸ்லாமாபாத் தெரிவித்து வருகிறது.
இதேவேளை ஆப்கானிஸ்தானின் தலிபான் அரசாங்கம் இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளதுடன், போராளிகள் பிரச்சினை பாகிஸ்தானின் உள்நாட்டு பிரச்சினை என்று கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.








