தனது முதல் குழந்தை பிரசவத்திற்காக வெலிமடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 22 வயதுடைய தாய், மருத்துவர்களின் களியாட்டத்தால் பரிதாபமாக கடந்த 31ம் திகதி உயிரிழந்துள்ளார்.
இந்த துயர சம்பவம் வெலிமடை போகம்பர பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில் வைத்தியசாலையில் இடம்பெற்ற வருட இறுதி விருந்தொன்றில் கலந்து கொண்ட வைத்தியர்கள் மற்றும் ஊழியர்களின் அலட்சியத்தால் உயிரிழந்துள்ளதாக பிரதேசவாசிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
சம்பவம்தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
வெலிமடை போகம்பர பகுதியைச் சேர்ந்த பாத்திமா ரிப்ஷா கடந்த 29ஆம் திகதி வெலிமடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
மறுநாள் 30ஆம் திகதி குறித்த தாய்க்கு கருப்பையில் வாயுக் கட்டி இருந்த போதிலும் சாதாரண பிரசவத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பிரசவத்தின் போது தாயின் வயிற்றில் கட்டி வெடித்து இரத்தம் கொட்டியதால் குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டபோதும், தாய் ஆபத்தான நிலையில் இருப்பதாக கூறப்பட்டது.
தாயார் மேலதிக சிகிச்சைக்காக பதுளை போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதையடுத்து வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர், கடந்த 31ம் திகதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக கூறப்படுகின்றது.
இந்நிலையில் இளம் தாயின் உயிரிழப்புக்கு , வெலிமடை வைத்தியசாலையின் கவனயீனமே காரணம் என தெரிவித்து, பெண்ணின் உறவினர்களும், கிராம மக்களும் வெலிமடை வைத்தியசாலை வைத்தியர்கள் மற்றும் ஊழியர்களுடன் மோதலில் ஈடுபட்டமையினால் வைத்தியசாலை சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் இளம் தாயின் மரணம் தொடர்பில் சுகாதார அமைச்சு விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும், இதன்படி, சுகாதார அமைச்சின் குழுவொன்று இந்த வாரம் வெலிமடை வைத்தியசாலை மற்றும் பதுளை மாகாண பொது வைத்தியசாலைக்கு விஜயம் செய்யவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.