யாழ்ப்பாணத்தில் வருடம் பிறந்தது முதல் மூன்று நாட்களில் 282 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் A. கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் (04) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

யாழ்ப்பாண மாவட்டத்தில் மருதங்கேணி மற்றும் நெடுந்தீவு பிரதேசங்கள் தவிர்ந்த ஏனைய 13 பிரதேச செயலகப் பிரிவுகளிலும் டெங்கு நோயின் பரம்பல் அதிகரித்து காணப்படுகிறது.

தினமும் சராசரியாக 70 தொடக்கம் 100 நோயாளர்கள் புதிதாக அடையாளம் காணப்படுகின்றார்கள்.

கடந்த டிசம்பர் மாதத்தில் யாழ்ப்பாணம், நல்லூர், கோப்பாய், மற்றும் சண்டிலிப்பாய் ஆகிய பிரதேச செயலக பிரிவுகளிலே டெங்கு நோயின் பரம்பல் தீவிரமாக காணப்பட்டது.

கடந்த வருடத்திலே யாழ் மாவட்டத்தில் 3986 டெங்கு நோயாளர்கள்  இனங்காணப்பட்டனர்.

இதனால்  டெங்கு நோயை கட்டுப்படுத்துவதற்கு பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

பரீட்சை மண்டபங்களாக தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளிலும் டெங்கு தொடர்பான பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டு புகையூட்டல் வேலை திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

எனவே எதிர்காலத்தில்  டெங்கு அறிகுறி காணப்படும் நோயாளர்கள் உடனடியாக அருகில் உள்ள வைத்திய சாலை நாடுவதன் மூலம் தங்களை டெங்கிலிருந்து பாதுகாத்துக் கொள்ள முடியும் –  எனவும் கேதீஸ்வரன் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here