மும்பையில் 6 மணி நேரத்தில் 300 மிமீ அளவுக்கு கனமழை கொட்டித் தீர்த்த நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று (08.07) பாடசாலைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் மகாராஷ்டிராவில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று காலை முதல் மும்பை, புறநகர்ப் பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. அதிகாலை 1 மணி முதல் 7 மணி வரையிலான காலகட்டத்தில் 300 மில்லிமீட்டர் மழைப் பதிவாகியுள்ளது.
இதற்கமைய அந்தேரி, குர்லா, பாந்த்ரூப், கிங்ஸ் சர்கிள், தாதர் உள்ளிட்ட பகுதிகளில் மழை நீர் சூழ்ந்துள்ளது. மும்பையின் தானே பகுதியில் கடந்த சனிக்கிழமை முதலே கனமழை பெய்வதால் அங்கு பாதிப்புகள் அதிகமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய 5 ரயில்கள் முற்றிலுமாக ரத்து செய்யப்பட்டுள்ளதுடன் மும்பை பேரூந்து சேவைகளும் முடங்கியுள்ளது. இதற்கிடையில் இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பில், மும்பையில் தென்மேற்கு பருவமழை தீவிரம் பெற்றுள்ளதால் எதிர்வரும் 10 ஆம் தேதி வரை மழை தொடருமெனவும் குறிப்பாக மராத்வடா பகுதியில் கனமழைக்கு வாய்ப்புள்ளது எனவும் தெரிவித்துள்ளது. அதேபோல் கேரளாவிலும் இன்று (08.07) கனமழை பெய்யக்கூடுமென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.