அஞ்சல் சேவையில் மேலதிக நேரக் கொடுப்பனவு போதுமானதாக இல்லை அல்லது கைரேகை வருகை முறையை ஏற்க முடியாதவர்கள் வேறு இடங்களில் வேலை தேடலாம் என அமைச்சர் மற்றும் அமைச்சரவைப் பேச்சாளர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகச் சந்திப்பில் அவர், அஞ்சல் சேவையின் மேலதிக நேரக் கொடுப்பனவு கட்டமைப்பிலும் கைரேகை அடிப்படையிலான வருகை முறையிலும் மாற்றமில்லை என உறுதிப்படுத்தினார்.
தற்போதைய நிதிக் கட்டுப்பாடுகளால் சிலர் 3/4 பங்கும், சிலர் 5/6 பங்கும் மட்டுமே பெறுகின்றனர். ஜனவரி 2027 முதல் அனைத்து அஞ்சல் ஊழியர்களுக்கும் 5/6 மாதிரி ஒன்றே பயன்படுத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
கைரேகை முறைக்கு எதிர்ப்பு தெரிவித்தது மத்திய அஞ்சல் பரிமாற்ற ஊழியர்களில் சிலர் மட்டுமே என்றும், இது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
“சம்பளம் மற்றும் மேலதிக நேரக் கொடுப்பனவை உயர்த்தியுள்ள நிலையில் கைரேகை முறையை மறுப்பது ஏற்க முடியாது. இந்த இரண்டையும் ஏற்றுக்கொள்ளாதவர்கள் வேறு வேலை தேடலாம்,” என அமைச்சர் வலியுறுத்தினார்.







