அம்பாறை அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிலுள்ள அட்டாளைச்சேனையில் 140 கிராம் ஜஸ் போதைப் பொருளுடன் 3 வியாபரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இச் சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (6) இடம்பெற்றுள்ளது.

இதில் இரண்டு மோட்டார் சைக்கிள் மற்றும் பொதிசெய்யும் இயந்திரம் நிறுவை தராசு போன்றவைகளை மீட்டுள்ளதாக அக்கரைப்பற்று பொலிசார் தெரிவித்தனர்.

பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றினையடுத்து பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் வழிகாட்டலில் போதை ஒழிப்பு பிரிவு பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் யு.எல்.எஸ்.ஆப்தீன் தலைமையில் பொலிசார் அட்டாளைச்சேனை பகுதியிலுள்ள வீதியில் மாறுவேடத்தில் கண்காணிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

இதன் போது இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் போதை வியாபாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது மாறுவேடத்தில் இருந்த பொலிசார் அவர்களை சுற்றிவளைத்து  சோதனையிட்டனர்.

இதன்  போது  84 கிராம் 620 மில்லிக்கிராம் மற்றும் 31 கிராம் 50 மில்லிக்கிராம் மற்றும் 24 கிராம் 94 மில்லிக்கிராம் ஆக 140 கிராம் ஜஸ் போதைப் பொருளை 3 பேரிடமிருந்து மீட்டதையடுத்து அவர்களை கைது செய்தனர்.

இதில் ஒருவர் ஏற்கனவே 2007ம் ஆண்டு குற்றசாட்டு ஒன்றில் கைது செய்யப்பட்டு மன்னார் நீதிமன்ற பிணையில் வெளிவந்து நீதிமன்றில் ஆஜராகாததையடுத்து நீதிமன்ற பிடியானை பிறப்பிக்கப்பட்டு தலைமறைவாகி வந்துள்ளார்.

மேலும் கைது செய்யப்பட்ட மூன்று பேரும் நீண்டகாலமாக போதை பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்துள்ளதாக பொலிசாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இவர்களை விசாரணையின் பின்னர் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக  பொலிசார் தெரிவித்தனர்

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

(மட்டக்களப்பு நிருபர்-சரவணன்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here