‘‘தேர்தல் காலப் பகுதியில் தேசிய மக்கள் சக்தியால் முன்வைக்கப்பட்ட வாக்குறுதிகள் வரவு செலவுத்திட்டத்தில் உள்ளடக்கப்படவில்லை. அதிகாரத்துக்காக பொய்கூறி மக்களின் வாக்குகளையும் இறையாண்மை அதிகாரத்தையும் திருடி தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் மிக பெரிய ஆபத்தை ஏற்படுத்தியுள்ளது’’ என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள வரவு செலவுத் திட்டம் தொடர்பில் விளக்கமளிக்கும் வகையிலான செய்தியாளர் சந்திப்பு அந்தக் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று (19/02/2025) இடம்பெற்றது. அதன்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,
ஒரு அரசாங்கம் முன்வைக்கும் வரவு செலவுத் திட்டத்தின் அடிப்படையிலேயே அந்த அரசாங்கத்தின் பயணப்பாதை உறுதிப்படுத்தப்படுகிறது. அதனடிப்படையில் கடந்த 17ஆம் திகதி ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டம் தேசிய மக்கள் சக்தியின் கன்னி பாதீடாகும்.
அநுரகுமார திசாநாயக்கவின் இந்த வரவு செலவுத் திட்டத்தில் சமூக பொருளாதாரத்தை முன்னெடுப்பதற்கான ஒரு ஏற்பாடு கூட இடம்பெற்றிருக்கவில்லை. தவறான பொருளாதாரக் கொள்கையிலிருந்து நாட்டை மீட்க புதிய பொருளாதாரக் கொள்கையை அறிமுகப்படுத்துவதாக கூறினார்கள். பழைய அரசாங்கங்களை விமர்சித்துவிட்டு அந்த அரசாங்கங்கள் பின்பற்றிய அதே கொள்கையை அவ்வாறே முன்னெடுத்துச் செல்வதென்றால் அது எவ்வாறு புதிய பயணப் பாதையாக கருத முடியும். அது புதிய சமூக பொருளாதார வேலைத்திட்டமாகும். அது எவ்வாறு மாற்று சமூக பயணமாக இருக்கும்.
தேசிய மக்கள் சக்தியின் புதிய நோக்கெல்லையை நோக்கி பயணம், புதிய பொருளாதார வேலைத்திட்டம் எதுவும் இதில் உள்ளடக்கப்படவில்லை. இந்த பின்னணியில் சர்வதேச நாணய நிதியத்தின் அளவுருக்களுக்கமைய தற்போதைய அரசாங்கம் வரவு செலவுத்திட்டத்தை முன்வைத்துள்ளதால் ஆட்சி மாற்றம் ஏற்பட்டிருந்தாலும் பயணப்பாதையில் மாற்றம் ஏற்படவில்லை என்று மத்திய வங்கியின் ஆளுநரே கூறுகின்றார். முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் இந்த வரவு செலவுத் திட்டத்தால் மகிழ்வடைந்திருப்பார்.
சர்வதேச நாணய நிதியத்தின் அளவுருக்களை போற்றும் வரவு செலவுத் திட்டத்தால் இந்த நாட்டை மீட்க முடியாது. ஏதாவதொரு முறையில் அரச வருமானத்தை அதிகரித்துக்கொண்டு 13 சதவீதத்துக்கு அப்பால் அதனை செலவு செய்ய முடியாவிட்டால், அரசாங்கத்தின் முதலீடுகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்றால் அடுத்தகட்டமாக இவர்கள் தனியார் மயப்படுத்தலை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறார்கள்.
முதலாவது வரவு செலவுத் திட்டத்திலேயே பாடசாலை புத்தகங்களுக்கான வரியையும் மருத்துவப் பரிசோதனைகளுக்கான வரிகளையும் மருந்துகளுக்கான வரியையும் நீக்குவோம் என்று கூறினார்கள். ஆனால் இந்த வரவு செலவுத் திட்டத்தில் அவ்வாறான எவ்வித யோசனையும் முன்வைக்கப்படவில்லை.
அவ்வாறெனில் மக்களிடம் திருடுவதை விட, வாக்குகளுக்காக பொய்கூறி மக்களின் வாக்குகளையும் இறையாண்மை அதிகாரத்தையும் திருடுவது மிகவும் அபாயகரமானது. அதிகாரத்துக்காக ஆசிரியர்களையும் தொழிலாளர்களையும் ஏமாற்றியுள்ளார்கள். அதனூடாக அதிகாரத்தை பெற மாத்திரமே முயற்சித்துள்ளார்களே தவிர வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான எந்த ஏற்பாடும் தேசிய மக்கள் சக்தியிடம் இருந்திருக்கவில்லை’’ என்றார்.






