நாடளாவிய ரீதியில் இன்று (31) காலை 8.00 மணி முதல் ஆரம்பிக்கவிருந்த அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் வேலைநிறுத்த போராட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.
இந்த தகவலை, சங்கம் வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையில்தான் அறிவித்துள்ளது.
நேற்று (30) இரவு சுகாதார அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மற்றும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் இடையே தொலைபேசி மூலமாக நடைபெற்ற விசேட கலந்துரையாடலின் போது எட்டப்பட்ட இணக்கத்தின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சு ஏற்றுக்கொண்ட நடைமுறையை மீறி தன்னிச்சையாக மேற்கொள்ளப்பட்ட வைத்தியர்களின் இடமாற்றங்கள் இடைநிறுத்தப்பட்டு, அதற்குப் பதிலாக அங்கீகரிக்கப்பட்ட நடைமுறைப்படி புதிய கால அட்டவணையுடன் இடமாற்றங்கள் மேற்கொள்ளப்படும் என இணக்கம் எட்டப்பட்டுள்ளது.
இந்த இணக்கங்கள் இன்று நடைபெறும் சுகாதார அமைச்சின் நிர்வாக வைத்தியர்களின் விசேட கலந்துரையாடலில் உறுதிப்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனை முன்னிட்டு, அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் இன்று நண்பகல் 12.00 மணி வரை வேலைநிறுத்தத்தை தற்காலிகமாக இடைநிறுத்த தீர்மானித்துள்ளது.
எனினும், இணக்கங்கள் நடைமுறைப்படுத்தப்படாவிட்டால், எந்த நேரத்திலும் மீண்டும் வேலைநிறுத்தத்தை ஆரம்பிக்க முடிவு செய்துள்ளதாக அந்த சங்கம் எச்சரித்துள்ளது.







