நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா நாடாளுமன்றில் நேற்று வெளியிட்ட கருத்துக்கு பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலி தமது கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.
நேற்றைய தினம் சிறப்புரிமை கேள்வியை எழுப்பிய நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, சபாநாயகரும், நாடாளுமன்ற நிர்வாகமும் வெட்கமடைய வேண்டும் எனத் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் இன்றைய தினம் (2/6/2025) நாடாளுமன்றில் கருத்துரைத்த எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் கைது செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.
இதன்போது குறுக்கிட்ட பிரதி சபாநாயகரை தமது உரையில் ‘பாய வேண்டாம்’ என எதிர்க்கட்சி தலைவர் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து எழுந்த சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க, நாடாளுமன்றில் சபாநாயகருக்கு மதிப்பளிக்கப்பட வேண்டும் எனவும், எதிர்க்கட்சி தலைவர் பிரயோகித்த வார்த்தையை மீளப் பெறவேண்டும் எனவும் குறிப்பிட்டார்.
இதற்கு கருத்துரைத்த பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலி, தமக்கு மதிப்பளிக்காவிட்டாலும் சபாநாயகரின் ஆசனத்துக்கு மதிப்பளிக்கப்பட வேண்டும் எனத் தெரிவித்தார்.
இன்று எதிர்க்கட்சித் தலைவர் கருத்தும் நேற்றைய தினம் நாடாளுமன்றில் இராமநாதன் அர்ச்சுனா முன்வைத்த கருத்தும், சபாநாயகரை அவமதிக்கும் வகையில் அமைந்திருந்ததாகத் தெரிவித்தார்.
இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா கருத்துரைக்க முற்பட்ட போது அவரை அமரும் படியும் சபையின் கௌரவத்தைப் பேணுமாறும் பிரதி சபாநாயகர் வலியுறுத்தினார்.
எனினும் நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தொடர்ந்து கருத்துரைக்க முற்பட்ட நிலையில், அவருக்கு எதிர்ப்பை வெளியிட்ட பிரதி சபாநாயகர், இந்த நிலை தொடர்ந்தால் அவரை நாடாளுமன்றில் இருந்து வெளியேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.
இதனையடுத்து கருத்துரைத்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, தாம் முன்வைத்த கருத்து சபாநாயகரை அவமதித்திருக்குமாயின் அதனை மீளப் பெறுவதாகத் தெரிவித்துள்ளார்.








