தலவாக்கலை பிரதேச செயலகத்தின் அதிகாரி ஒருவர் அஸ்வெசும பயனாளிகளுக்குச் சேர வேண்டிய 916,000 ரூபாவை பயனாளிகளுக்கு வழங்காது, வேறு ஒருவரின் கணக்கிற்கு மாற்றியுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பில், தலவாக்கலை பதில் பிரதேச செயலாளர் சமீரா கம்லத்தால், இன்று(07) தலவாக்கலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது.

அஸ்வெசும பயனாளிகள் தமக்குரிய கொடுப்பனவு கிடைக்கப்பெறவில்லை என பிரதேச செயலாளரிடம் முறைப்பாடு அளித்ததைத் தொடர்ந்து, பிரதேச செயலாளர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், அந்தப் பணம் மோசடி செய்யப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

இதனையடுத்து, நுவரெலியா மாவட்ட செயலாளர் துஷாரி தென்னக்கோன் குறித்த அதிகாரியை பணி இடைநீக்கம் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளார்.

குறிப்பிட்ட கணக்கு தொடர்பாக முழுமையான விசாரணை நடத்தப்பட்டு, அது குறித்த அறிக்கை பொலிஸாரிடம் சமர்ப்பிக்கப்படும் என தலவாக்கலை பிரதேச செயலாளர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

அரசாங்க நிதியை தவறாகப் பயன்படுத்துதல் மற்றும் துஷ்பிரயோகம் செய்தல் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை நோர்வூட் பிரதேச செயலகத்திலும் இவ்வாறு அஸ்வெசும பயனாளிகளின் பணம் மோசடி செய்யப்பட்டமை தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here