தனியார் துறை ஊழியர்களுக்கான மாதாந்திர ரயில் பருவ சீட்டுக்களை இணைய முறையில் பெற்றுக்கொள்ளும் வசதி அக்டோபர் 01 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் என இலங்கை ரயில்வே திணைக்களம் நடவடிக்கை தெரிவித்துள்ளது.
இதற்கமைய, ரயில்வே திணைக்களம் அறிமுகப்படுத்தியுள்ள `seatreservation.railway.gov.lk` என்ற இணையத்தளம் மூலம் தேவைக்கேற்ப ரயில் பருவ சீட்டுக்களை இணையத்தில் (ஒன்லைன்) பெற்றுக்கொள்ள தனியார் துறை ஊழியர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை அரச துறைக்கு மாத்திரமே நடைமுறையில் இருந்த இந்த வசதியை தனியார் துறைக்கும் வழங்கும் உத்தியோகபூர்வ நிகழ்வு நேற்று (08) பத்தரமுல்ல பகுதியில் உள்ள ஒரு தனியார் விடுதியில் நடைபெற்றது.
போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் வைத்தியர் பிரசன்ன குணசேன தலைமையில் நடைபெற்ற அந்த நிகழ்வில் டிஜிட்டல் பொருளாதார விவகாரங்களுக்கான பிரதி அமைச்சர் பொறியலாளர் எரங்க வீரத்ன கலந்து கொண்டார்.
புதிய முறைமையை அறிமுகப்படுத்துவதன் நோக்கம், ரயில் மாதாந்திர பருவ சீட்டுக்களை பெற்றுக்கொள்ளும் போது இதுவரை பயணிகள் எதிர்கொண்ட சிரமங்களை குறைப்பதாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர் பருவ சீட்டுக்களை பெற்றுக்கொள்ள விண்ணப்ப படிவம், புகைப்படம், வதிவிடத்தை உறுதிப்படுத்தும் ஆவணங்கள் மற்றும் தேசிய அடையாள அட்டையின் நகல் ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டியிருந்ததுடன், வரையறுக்கப்பட்ட காலப்பகுதிக்குள் அந்த சேவையை பெற்றுக்கொள்ளவும் வேண்டியிருந்தது.
புதிய முறைமையின் கீழ் பயணியின் அடையாளம் மற்றும் பயனர் கணக்கு சரிபார்க்கப்பட்ட பின்னர் ஒன்லைனில் பருவ சீட்டுக்களை பெற்றுக்கொள்ள முடியும்.
இந்த திட்டம் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சு, டிஜிட்டல் பொருளாதார விவகார அமைச்சு, இலங்கை ரயில்வே திணைக்களம் மற்றும் தொலைபேசி தொடர்பு வசதிகளை வழங்கும் நிறுவனம் ஆகியவை இணைந்து நடைமுறைப்படுத்துகின்றன.
ரயில் சேவையை டிஜிட்டல்மயமாக்கும் விரிவான திட்டத்தின் கீழ் பயணிகளுக்கு மிகவும் திறனான மற்றும் இலகுவான சேவையை வழங்கும் மேலும் ஒரு படியாக இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் தற்போது களனிவெலி ரயில் பாதையில் தேர்ந்தெடுக்கப்பட்ட சில ரயில் நிலையங்களை மையமாக கொண்டு ஸ்மார்ட் டிக்கெட் முன்னோடி திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்படுகிறது.
அத்துடன் ரயில் ஆசனங்களை ஒன்லைனில் முன்பதிவு செய்யும் வசதியும் படிப்படியாக விரிவுப்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.








