பாரியளவிலான “குஷ்” மற்றும் “ஹஷீஷ்” போதைப்பொருட்களை சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வந்த 2 வெளிநாட்டு விமானப் பயணிகள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சுமார் 5 கோடியே 13 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் பெறுமதியான போதைப்பொருட்களே இவ்வாறு கொண்டு வரப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்கள் 23 மற்றும் 39 வயதுடைய தாய்லாந்து நாட்டவர்கள் ஆவர்.
இவர்கள் தாய்லாந்தில் உள்ள இறைச்சி விற்பனை நிலையத்தில் பணியாற்றுபவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
சந்தேகநபர்கள் இன்று (08) அதிகாலை 12.00 மணிக்கு தாய்லாந்தின் பேங்கொக்கிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்துள்ளனர்.
அங்கு வருகை முனையத்தில் ‘பச்சை வழி’ மூலம் இந்த போதைப்பொருள் தொகையை வெளியே கொண்டு செல்ல முயன்றபோது சுங்க அதிகாரிகளால் இவர்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.
இதன்போது அவர்களின் 2 பயணப் பைகளுக்குள் இருந்த வைட்டமின் கொள்கலன்கள் 16 இன் உள்ளே மறைத்து வைக்கப்பட்டிருந்த 4 கிலோகிராம் 496 கிராம் “குஷ்” போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டது.
அத்துடன், ‘திராட்சை பேஸ்ட்’ போல வெளியில் தெரியுமாறு பொலித்தீனில் சுற்றி தயாரிக்கப்பட்டிருந்த 641 கிராம் “ஹஷீஷ்” போதைப்பொருள் தொகையும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளுக்காக சந்தேகநபர்கள் இருவரும் போதைப்பொருள் தொகையும் கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் பணியக அதிகாரிகளிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.








