அயன அயல் ஒருங்கல் வலயத்தின் தாக்கத்தின் காரணமாக இலங்கைக்கு மேலாக வளிமண்டல தளம்பல் நிலை காணப்படுகின்றது. அதாவது வட அரைக் கோளத்தில் இருந்தும் தென் அரைக் கோளத்தில் இருந்தும் காற்று வந்து குவிகின்றது. இதன் காரணமாக நாட்டின் வானிலையில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றது.
ஆனபடியினால் இன்று முதல் சில தினங்களுக்கு நாடு முழுவதிலும் மழையுடனான வானிலை அதிகரித்துக் காணப்படுமென சிரேஸ்ட வானிலை அதிகாரி மொஹமட் சாலிஹீன் தெரிவித்துள்ளார்.
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
மத்திய , சப்ரகமுவ, மேல் , வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் அம்பாறை மாவட்டத்தின் சில இடங்களிலும் 100 mm இலும் கூடிய பலத்த மழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேல், தென் மற்றும் வட மாகாணங்களில் காலை வேளையிலும் மழை பெய்யக்கூடும்.
பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் அவதானத்துடன் செயற்படுமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
காங்கேசன்துறை தொடக்கம் புத்தளம், கொழும்பு, காலி, ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடல் பிராந்தியங்களின் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
நாட்டை சூழ உள்ள ஏனைய கடல் பிராந்தியங்களின் சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
ஆனால் இடியுடன் கூடிய மழை பெய்கின்ற சந்தர்ப்பங்களில் பலத்த காற்று வீசுவதுடன் அவ்வேளைகளில் கடல் பிராந்தியங்கள் மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படும்.








