இயற்கை அனர்த்தங்களால் வசிப்பிடங்களை இழந்த 3,250 பெருந்தோட்ட குடும்பங்களுக்கு புதிய வீடுகளை வழங்குவதற்கான வேலைத்திட்டத்திற்கான அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
2025–2027 காலப்பகுதியில் நடைமுறைப்படுத்தப்படவிருக்கும் திட்டத்தின் கீழ், 1,400 புதிய வீட்டு அலகுகள் அமைக்கப்பட்டு பயனாளிக் குடும்பங்கள் குடியேற்றப்பட உள்ளனர்.
மொத்த செலவு 4,500 மில்லியன் ரூபாயாக இருக்கின்றது; அதில் 2025 ஆம் ஆண்டிற்கு 1,300 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தற்போது பதுளை, கேகாலை, நுவரெலியா, இரத்தினபுரி, கண்டி, மாத்தளை, கொழும்பு, களுத்துறை, மாத்தறை மற்றும் மொனராகலை மாவட்டங்களில் தகுதியான 495 குடும்பங்களுக்கு வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன.
மீதமுள்ள குடும்பங்களுக்கான வீடுகள் நிர்மாணத்திற்காக வெளிநாட்டு உதவிகளைப் பெறும் முயற்சிகளும் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சினால் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சரவை தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.







