2019 ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்புகளுக்கு முன்பே அரசாங்கத்திற்கு எச்சரிக்கைகள் கிடைத்ததை நிரூபிக்கும் வகையிலான வட்ஸ்அப் ஸ்கிரீன்ஷோட்களை சமூக செயற்பாட்டாளர் ஒஷல ஹேரத் வெளியிட்டுள்ளார்.

2019 ஏப்ரல் 21-ஆம் திகதிக்கு முன்னதாக ஈஸ்டர் தாக்குதல் நடைபெற வாய்ப்புள்ளதாக எச்சரித்து, இலங்கை புலனாய்வு சேவைகள் (SIS) பணிப்பாளரிடம் இருந்து பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கு அனுப்பப்பட்டதாகக் கூறப்படும் வாட்ஸ்அப் செய்திகளின் ஸ்கிரீன்ஷோட்களையே அவர் பகிர்ந்துள்ளார்.

இலங்கையின் அரச புலனாய்வுத்துறை சேவையின் (SIS) பணிப்பாளருக்கும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கும் இடையே பரிமாறப்பட்டதாகக் கூறப்படும் இந்தச் செய்திகள், ஜஹ்ரான் ஹாஷிம் மற்றும் அவரது சகாக்கள் இலங்கையில் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டுள்ளதாக வெளிநாட்டுத் தரப்பிலிருந்து பெறப்பட்ட உளவுத் தகவல்கள் சுட்டிக்காட்டியுள்ளன என்பதைக் குறிப்பிடுகின்றன.

இந்தத் தகவல் பரிமாற்றத்தில், கிழக்குப் பகுதியில் வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட மோட்டார் சைக்கிள் சம்பந்தப்பட்ட ஒரு ஒத்திகை பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது.

“21.4.2019 அன்று அல்லது அதற்கு முன்னர் எந்த நேரத்திலும்” இந்தத் தாக்குதல் நிகழக்கூடும் என்றும், தேவாலயங்கள் மற்றும் தங்கும் விடுதிகள் இதன் சாத்தியமான இலக்குகளாக இருக்கலாம் என்றும் நம்பப்பட்டது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது பாராளுமன்றக் குழு ஏற்கனவே கண்டறிந்தவற்றுடன் ஒத்துப்போகிறது,எவ்வாறாயினும் எச்சரிக்கைகள் முன்கூட்டியே விடுக்கப்பட்டும் இந்த விடயம் புறக்கணிக்கப்பட்டுள்ளது என சுட்டிக்காட்டப்படுகிறது.

பாராளுமன்றக் குழு வெளியிட்ட அறிக்கையில்,

‘ஏப்ரல் 4, 2019 – ஒரு சாத்தியமான தாக்குதல் குறித்து, ஒரு மூலத்திலிருந்து வட்ஸ்அப் வழியாக ஆரம்பகட்ட புலனாய்வுத் தகவல் பெறப்பட்டது. இதேபோன்ற எழுத்துப்பூர்வத் தகவல் ஏப்ரல் 5 அன்று பெறப்பட்டது’.

‘ஏப்ரல் 7, 2019 – அப்போதைய தேசிய உளவுத்துறைத் தலைவரிடம் சிசிர மெண்டிஸிடம் முதல் தகவல் தெரிவிக்கப்பட்டது’.

‘ஏப்ரல் 8, 2019 – பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிரி பெர்னாண்டோவிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது, அவர் காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்குமாறு அறிவுறுத்தினார்’.

‘ஏப்ரல் 9, 2019 – உயர் பாதுகாப்பு அதிகாரிகளுடன் புலனாய்வுத்துறை கூட்டத்தை நடத்தியுள்ளது. அதில் குறித்த அச்சுறுத்தலுக்குப் போதுமான கவனம் செலுத்தப்படவில்லை’ என்பவை உள்ளிட்ட விடயங்கள் குறிப்பிடப்பட்டிருந்தன.

இதேவேளை சமீபத்தில் வெளிவந்த ஸ்கிரீன்ஷோட்களின் நம்பகத்தன்மை அதிகாரிகளால் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை.

ஈஸ்டர் தாக்குதல்கள் ஏப்ரல் 21, 2019 அன்று நடந்தன, அதில் 270க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here