போரில் அன்புக்குரியவர்களை இழந்த வலியை பல குடும்பங்கள் இன்னும் சுமக்கின்றன என்றும் இதுபோன்ற துன்பங்கள் மீண்டும் ஒருபோதும் நிகழாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் எனவும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
பத்தரமுல்லையில் இன்று நடைபெற்ற போர் வீரர்கள் நினைவு விழாவில் உரையாற்றிய போதே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இதனை குறிப்பிட்டார்.
இராணுவத்தினர் பயங்கரவாதத்தை தோற்கடிப்பதை மாத்திரம் விரும்பவில்லை என்றும், இலங்கை ஒரு வளர்ச்சியடைந்த, அமைதியான மற்றும் நியாயமான நாடாக மாற வேண்டும் என்றும் அவர்கள் விரும்பினர் என்றும் அவர் கூறினார்.
அவர்களின் விருப்பத்தை சாத்தியமாக்கவும், நாட்டில் அமைதியைக் காக்கவும் அரசாங்கம் பாடுபடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் ஆயுதப் படைகளின் தியாகங்களுக்கு நன்றி தெரிவித்ததோடு, வெறும் விழாக்கள் மூலம் மாத்திரமல்லாமல், ஒரு சிறந்த இலங்கையைக் கட்டியெழுப்புவதன் மூலம் நாம் அவர்களைக் கௌரவிக்க வேண்டும் என்றும் கூறினார்.
இந்தப் போர் பிரிவினைவாதத்திற்கு எதிரானது, எந்தவொரு இனக்குழுவிற்கும் எதிரானது அல்ல என்று அவர் வலியுறுத்தியதோடு இலங்கை அனைத்து சமூகங்களுக்கும் சமமாக சொந்தமானது என்றும் மேலும் நாம் பிரிவினைகளைத் தவிர்க்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
இறுதியாக, பேரிடர்களின் போது உதவியதற்காக இராணுவத்தைப் பாராட்டிய அவர், சட்டத்தையும் நீதியையும் பாதுகாக்கும் அதேவேளையில் இலங்கையின் உலகளாவிய பிம்பத்தை மேம்படுத்த அரசாங்கம் பாடுபடுகிறது எனவும் தெரிவித்தார்.








