சந்தையில் பற்றாக்குறையாக உள்ள உப்பை இறக்குமதி செய்யத் தனியார்த் துறைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக, இலங்கை உப்பு உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
உப்பு பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காகக் கடந்த டிசம்பர் மாதம் 30,000 மெட்ரிக் தொன் உப்பை இறக்குமதி செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியது.
அதன்படி, ஜனவரி 31 ஆம் திகதி வரை அரச துறைக்கு, அமைச்சரவை அனுமதி வழங்கிய நிலையில், பெப்ரவரி 28 ஆம் திகதி வரை குறித்த கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது.
இந்த சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, உப்பு உற்பத்தியாளர்கள் மற்றும் கைத்தொழில் அமைச்சின் செயலாளரின் தலைமையில் நேற்று கலந்துரையாடல் ஒன்று இடம் பெற்றது.
இதன்படி, இதுவரை அரச துறைக்கு மட்டுமே உப்பு இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டிருந்தாலும், நேற்று முதல் தனியார்த் துறைக்கும் உப்பு இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்படும் என இலங்கை உப்பு உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் கனக அமரசிங்க தெரிவித்தார்.
நேற்றைய கலந்துரையாடலுக்குப் பின், உப்பு இறக்குமதியால் சந்தையில் உப்பின் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அந்த சங்கத்தின் உறுப்பினர்கள் தெரிவித்தனர்.
இருப்பினும், சந்தையில் ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு காரணமாக உப்பு விலை அதிகரித்திருந்தாலும், இறக்குமதி காரணமாகச் சந்தையில் உப்பு விலையில் அதிகரிப்பு ஏற்படாது என இலங்கை உப்பு உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் கனக அமரசிங்க தெரிவித்தார்.








