இலங்கையின் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கு தமது பிராந்திய ஊடக வலையமைப்புகள் ஊடாக ஆதரவளிக்க முன்னணி சர்வதேச ஒளிபரப்பு நிறுவனங்கள் விருப்பம் தெரிவித்துள்ளதாக வெளிவிவகார மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
ஆசிய-பசுபிக் ஒளிபரப்பு ஒன்றியத்தின் (ABU) 63வது பொதுச் சபை கூட்டத்தில் கலந்துகொண்ட முன்னணி சர்வதேச ஒளிபரப்பு நிறுவனங்களின் தலைவர்களுடனான சந்திப்புகளின் போது இந்த ஆதரவு வெளிப்படுத்தப்பட்டதாக அமைச்சர் கூறியுள்ளார்.
இலங்கையின் சுற்றுலாத்துறையை மேம்படுத்தவும், நாட்டை பரந்த சர்வதேச பார்வையாளர்களுக்கு அறிமுகப்படுத்தவும் சர்வதேச ஊடக ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து இந்த கலந்துரையாடல்களில் கவனம் செலுத்தப்பட்டது.
அமைச்சர் ஹேரத், ஏ.பி.சி (ABC) அவுஸ்திரேலியாவின் சர்வதேச சேவைகள் நிறுவனத்தின் பொது முகாமையாளர் கிளேர் கோர்மன், (ஏ.பி.சி) அவுஸ்திரேலியாவின் சர்வதேச சேவைகள் தலைவர் நெஸ்ரின் பௌசைன், ஆபிரிக்க ஒளிபரப்பு ஒன்றியத்தின் (AUB) தலைமை நிர்வாக அதிகாரி கிரெகொயர் நிஜாகா, மற்றும் RTPRC சீனாவின் பணிப்பாளர் நாயகமும் ABU இன் உப தலைவருமான ஷௌ ஜிஹோங் ஆகியோருடன் கலந்துரையாடியுள்ளார்.
இலங்கை சுற்றுலா மேம்பாட்டு பணியகத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் ஏனைய அதிகாரிகளும் இந்த சந்திப்புகளில் கலந்துகொண்டனர்.
சர்வதேச ஒளிபரப்பு பிரதிநிதிகள் இலங்கையின் உபசரிப்பு, பாதுகாப்பு, இயற்கை அழகு மற்றும் மக்களின் அன்பான குணம் ஆகியவற்றை பாராட்டியதுடன், குறிப்பாக கொழும்பின் அழகை எடுத்துரைத்தனர் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் தங்களுக்கு கிடைத்த அனுபவம் தங்கள் எதிர்பார்ப்புகளை மிஞ்சியதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
சர்வதேச நிகழ்வுகளை நடத்துவது, நிகழ்வுக்கு அப்பாலும் நன்மைகளை வழங்குவதாகவும், உலகளாவிய ஊடக வலையமைப்புகளுடன் நீடித்த தொடர்புகளை ஏற்படுத்தி, புதிய சுற்றுலா சந்தைகளை அடைய வாய்ப்புகளை திறப்பதாகவும் அமைச்சர் ஹேரத் தெரிவித்துள்ளார்.
குறித்த பொதுச் சபை கூட்டம் இலங்கைக்கு பெறுமதியான சர்வதேச கூட்டாண்மைகளை ஏற்படுத்தவும், நாட்டின் சுற்றுலாத் துறையை மேம்படுத்த புதிய வழிகளை ஆராயவும் உதவியதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.








