சிங்கராஜ வனத்தில் இருந்து 250க்கும் மேற்பட்ட பூச்சிகள் மற்றும் ஊர்வனவற்றை சேகரித்ததாக கைது செய்யப்பட்ட நான்கு சீன பிரஜைகள், எதிர்வரும் நவம்பர் 23ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். களவானை நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
மூன்று ஆண்கள் மற்றும் ஒரு பெண் அடங்கிய குறித்த சந்தேகநபர்கள், சிங்கராஜ வனத்தின் இடையக வலயத்தில் இலங்கைக்கே உரித்தான பூச்சிகள் மற்றும் ஊர்வனவற்றை சேகரித்துக் கொண்டிருந்த போது வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உடவளவை தேசிய பூங்காவின் பனஹடுவ சரக பாதுகாப்பு அலுவலகத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என வனஜீவராசிகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சந்தேகநபர்களிடமிருந்து சுமார் 40 விலங்கு இனங்களைச் சேர்ந்த 250க்கும் மேற்பட்ட மாதிரிகளை வனஜீவராசிகள் அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
சந்தேகநபர்கள் கைப்பற்றப்பட்ட மாதிரிகளுடன் திங்கட்கிழமை (09) களவானை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், நவம்பர் 23ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டது.
உயிருடன் உள்ள மற்றும் இறந்த விலங்கு மாதிரிகளை அடையாளம் காண்பதற்காக இன்று அவற்றை (10) தேசிய அருங்காட்சியகத்திற்கு அனுப்பி, பின்னர் சுற்றுச்சூழலில் விடுவிக்குமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
சந்தேகநபர்கள் இதற்கு முன்னரும் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ள நிலையில், மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதேபோன்ற மரபணு வள சட்டவிரோத செயலில் ஈடுபட்ட வெளிநாட்டு பிரஜைகள் குழு ஒன்றுக்கு, சில தினங்களுக்கு முன்னர் நீதிமன்றத்தால் ரூ. 1 கோடிக்கு மேல் அபராதம் விதிக்கப்பட்டதாகவும் வனஜீவராசிகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.








