வவுனியா மாவட்டத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் இயலும் ஸ்ரீலங்கா தேர்தல் பிரசாரத்தில் நீர் வழங்கல் மற்றும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் கலந்துகொண்டு உரையாற்றும் போது,
இங்கு அனைவரும் திரண்டுள்ளீர்கள் அதற்கு காரணம் ஜனாதிபதி தேர்தல். நான் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிக்கும் விடயத்தை பற்றி கலந்துரையாடியிருந்தேன். நுவரெலியா மற்றும் மலையகம் மட்டுமல்லாமல் ஏனைய மாவட்டங்களுக்குமாக நான் உரையாற்றுவேன்.
இங்கு அதிகமானோர் உரையாற்றினதைப் போல் வரிசையில் காத்திருந்தமை, எரிவாயு மற்றும் பெற்றோல் பிரச்சினை தொடர்பாக நான் உரையாற்றபோவதில்லை, ஆனால் சில உண்மையான விடயங்களை இங்கு நான் கூற வேண்டும்.
நீங்கள் பல்வேறு தேர்தலை சந்தித்திருப்பீர்கள் பல வாக்குறுதிகளை கேட்டிருப்பீர்கள் ஆனால் ஒன்றும் நடக்கவில்லை என்ற வெறுப்பு உங்களிடம் காணப்படும்.
இந்த தேர்தல் தான் தீர்மானிக்கப் போகின்றது இலங்கை நாட்டின் தலையெழுத்து எப்படி அமையப்போகின்றது என்று. இன்றைக்கு வன்னி மாவட்டத்தில் வாழ்கின்ற மக்கள் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்துக்கொண்டிருக்கின்றார்கள்.
வவுனியா மாவட்டத்தை பொறுத்த வரைக்கும் 33 சதவீதமான மக்களுக்கு மட்டும் தான் குடிநீர் கிடைக்கின்றது.
அதே போல் விவசாயம் மற்றும் காணி தொடர்பான பிரச்சனைகள் உள்ளது. இவை எல்லாவற்றிற்கும் ஒரு தீர்வு கட்டாயம் ஒரு கட்டத்தில் வரும் என்று ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு மற்றும் இன்றைக்கு குழந்தைகளுக்கு படிப்பு கற்றுக்கொடுப்பது பெரிய பிரச்சனையாக இருக்கின்றது.
பெரும்பான்மை இனத்தைச் சார்ந்த சமூகத்தில் வாழ்கின்ற மாவட்டங்களில் குடிநீர் வசதி 50% – 60% காணப்படுகின்றது.
ஆனால் வடக்கு, கிழக்கு மலையகத்தில் 40% விட குறைவாக காணப்படுகின்றது.
இந்த அமைச்சில் கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு 3000 மில்லியன் நஷ்டத்தை எதிர்நோக்கிய போது இறுதியாக ஒரு இளைஞரை நம்பி பொறுப்பை கொடுத்தார்கள்.அதே ஆட்சியில் 6000 மில்லியன் இலாபம் வந்தது.
அத்தோடு பொருளாதார நெருக்கடிக்கு காணப்படுகின்ற முக்கிய பிரச்சினை நம் நாட்டின் தலைமைத்துவம். இதுவரைக்கும் எங்களுடைய நாட்டின் தலைமைத்துவத்தை ஒரு உதாரணமாக எடுத்தோமானால் வரவு எட்டணா செலவு பத்தணா, ,இல்லாத பணத்தை வைத்து நாங்கள் தானம் செய்ய பார்ப்போம். அதுதான் எம்மிடம் உள்ள பிரச்சினை.
அதுமட்டுமல்லாமல் நம்முடைய மக்களின் ஒரு தவறான சிந்தனை, எப்பொழுதுமே கொள்கை ரீதியாக வாக்களிப்பதில்லை, உணர்வுரீதியாக வாக்களிப்பது.
ஒரு ஜனாதிபதி வேட்பாளரின் பொருளாதார ரீதியான கொள்கை என்ன?, அவருடைய வேலை திட்டம் என்ன?,எதிர்காலத்தில் என்ன நிலைமையில் இருப்போம்?,என்பவற்றை சிந்திப்பதில்லை.
நான் இங்கு ஒரு அமைச்சராகவும் பேச விரும்பவில்லை, நான் ஒரு தொழிற்சங்கத்தின் பொதுச்செயலாளராகவும் பேச விரும்பவில்லை, ஒரு இளைஞனாக பேச விரும்புகின்றேன். இங்கு இருக்கின்ற பெண்களிடம் நான் ஒரு விடயம் சொல்ல விரும்புகின்றேன்,ஆண்களை பொறுத்த வரைக்கும் பல்வேறு கஷ்டத்தை சந்தித்து வேலை வாய்ப்பு தொடர்பாக இருந்த வேலையில் இருந்து நீக்கப்பட்டார்கள், அதிகமானோர் கொழும்பில் வேலை செய்தார்கள், வெளிநாட்டில் வேலை செய்தார்கள்,அந்த வேலைகளைகூட பலவந்தமாக பறித்தார்கள். ஆனால் ஒரு பெண் அவர்களுடைய வீட்டில் இரண்டு வருடம் குழந்தைகளுக்கு மூன்று வேளை சாப்பாடு கொடுப்பதற்கு எப்படி கஷ்டப்பட்டார்கள் என்று உங்களுக்கு தெரியும். ஆகவே தான் நாட்டின் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களை ஆதரிப்பீர்கள் என்று எதிர்பார்க்கின்றேன் என நீர் வழங்கல் மற்றும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.








