பல அரச நிறுவனங்கள் இலஞ்சம் வாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபடும் தகவல்கள் கிடைத்துள்ளதாக இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணையம் தெரிவித்துள்ளது.

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ரங்க திசாநாயக்க குறித்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.

அரச நிறுவனங்களில் உள்ள உயர் அதிகாரிகளின் ஆதரவுடன் இலஞ்சம் பெறும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு இலஞ்சமாகப் பெறப்படும் பணத்தினை உயர் அதிகாரிகள் மற்றும் உறுப்பினர்கள் பகிர்ந்து கொள்வதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்நிலையில், கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில், இலஞ்ச ஒழிப்பு ஆணையம் நேற்று வெள்ளிக்கிழமை (23.05.2025) நாரஹேன்பிட்டியில் உள்ள மோட்டார் போக்குவரத்துத் துறை தலைமையகத்தில் சிறப்பு சோதனை நடத்தியதாக ரங்க திசாநாயக்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இலஞ்ச ஒழிப்பு ஆணையத்தின் உத்தரவின் கீழ் குறித்த மோட்டார் வாகன திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் அலுவலகத்திற்குள் சோதனை மேற்கொள்ளப்பட்ட வேளை 4.1 மில்லியன் ரூபாய் பணத்தை அதிகாரிகள் கண்டுபிடித்ததாக அவர் கூறியுள்ளார்.

குறித்த இலஞ்சம் வாங்கும் செயற்பாடுகள் பெரும்பாலான ஊழியர்களின் ஆதரவுடன் நடத்தப்படுவதாகவும், பறிமுதல் செய்யப்பட்ட 4.1 மில்லியன் ரூபாய் பணம் மோட்டார் வாகன திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் அந்த ஊழியர்களுக்குப் பகிர்ந்தளிக்க வைத்திருந்தார் எனவும் ரங்கா திசாநாயக்க கூறியுள்ளார்.

இந்நிலையில், மோட்டார் வாகன திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டு ஜூன் 3ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இலஞ்சம் கேட்பது அல்லது வழங்குவது ஒரு குற்றம். அவ்வாறான குற்றங்களில் ஈடுபடும் நபர்கள் மற்றும் நிறுவனங்கள் குறித்து ஆணையம் விழிப்புடன் இருப்பதாகவும் எச்சரித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here