நாட்டில் நடைமுறையிலுள்ள இலவச சுகாதார சேவையை டிஜிட்டல் மயமாக்குவதற்காக செயற்பாட்டுக் குழுவொன்றை அமைப்பது தொடர்பில், சுகாதார மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவின் தலைமையில் விசேட கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது.
இந்தக் கலந்துரையாடலில், அடுத்த 10 ஆண்டுகளுக்கான தேசிய சுகாதாரக் கொள்கைக்கு ஏற்ப, சுகாதார சேவைகளை டிஜிட்டல் மயமாக்கும் சாத்தியக்கூறுகள் மற்றும் அதற்கான குறுகிய கால, நீண்ட கால நடைமுறைகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.
டிஜிட்டல் மயமாக்கலுக்கான மூலோபாயக் கட்டமைப்பை உருவாக்குதல், சுகாதாரப் பாதுகாப்பு உட்கட்டமைப்பை மேம்படுத்துதல், சர்வதேச ஒத்துழைப்புடன் முக்கிய திட்டங்களை செயல்படுத்துதல், மற்றும் தரவுப் பாதுகாப்பு, மனிதவளப் பயிற்சி போன்ற அம்சங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
இவ்விடயங்கள் தொடர்பான சட்டமூல பொறிமுறை பத்திரத்தை சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அர்ஜுன திலகரத்ன சமர்ப்பித்தார்.
இந்த நிகழ்வில் சுகாதார பிரதி அமைச்சர் வைத்தியர் ஹன்சக விஜேமுனி, டிஜிட்டல் பொருளாதாரம் தொடர்பான பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன, ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் கலாநிதி ஹான்ஸ் விஜேசூரிய, சுகாதார அமைச்சின் செயலாளர் வைத்தியர் அனில் ஜாசிங்க உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.







