எமது கட்சி தமிழ்ப் பொது வேட்பாளருக்கான ஆதரவு நிலைப்பாட்டில் தொடர்ந்தும் உள்ளது என்று தமிழீழ விடுதலை இயக்கத்தின் ஊடகப் பேச்சாளர் குருசாமி சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் உள்ள தமிழீழவிடுதலை இயக்கத்தின் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், “தமிழ்த் தேசியப் பொதுக் கட்டமைப்பின் ஊடாக தமிழ்ப் பொது வேட்பாளராக அரியநேத்திரன் போட்டியிடுகின்ற நிலையில் நமது ஆதரவை வழங்கியிருந்தோம்.

இந்நிலையில், தெற்கிலிருந்து ஜனாதிபதி வேட்பாளராகப் போட்டியிடுகின்ற ரணில் விக்கிரமசிங்க மற்றும் சஜித் பிரேமதாஸ ஆகியோரிடம் இருந்து பேச்சுக்கு வருமாறு அழைப்புகள் கிடைத்தன.

அவர்கள் இருவரையும் நாங்கள் சந்தித்து தமிழ் பொது வேட்பாளரின் கொள்கை தொடர்பில் ரணிலிடமும், சஜித்திடமும் தெளிவாகக் கூறினோம்.

ஆனால், அவர்கள் தமக்கு ஆதரவு வழங்குமாறு கேட்கவில்லை. அது உங்கள் ஜனநாயக உரிமை, உங்களுடைய கோரிக்கை தொடர்பில் நாம் கரிசனை செலுத்துகின்றோம் என்று அவர்கள் தனித்தனியே தெரிவித்தார்கள்.

நாங்கள் அவர்களின் கருத்து தேர்தலுக்கான கருத்தா? அல்லது உண்மையில் தமிழ் மக்கள் தொடர்பில் கரிசனையாக உள்ளனரா? என்பது தொடர்பில் எமது பொதுக் கட்டமைப்புடன் ஆராய்ந்து பதில் தருவோம் எனக் கூறினோம்.

இந்தச் சந்திப்பின் பின்னர் ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ரெலோ ஆதரவு வழங்கப் போவதாகச் சில விஷமிகள் பொய்ப் பிரச்சாரம் செய்தனர்.

அதுமட்டுமல்லாது அண்மையில் இலங்கைக்கான சுவிஸ் தூதர் பொதுக் கட்டமைப்பு சார்ந்தவர்களை யாழ்ப்பாணத்தில் சந்தித்தார்.

இந்தச் சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினரான சித்தார்த்தன் பங்குபற்றிய நிலையில் நாங்கள் பங்குபற்றவில்லை என்பதைக் காரணமாக வைத்து சிலர் விஷமப் பிரச்சாரம் செய்தனர்.

சிவில் அமைப்புப் பிரதிநிதிகளைச் சந்திப்பதற்காகவே சுவிஸ் தூதுவர் யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்தார். திடீரென்று ஒழுங்குபடுத்தப்பட்ட சந்திப்பு என்பதால் எமது கட்சியின் தலைவர் நாடளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் அதில் பங்குபற்ற முடியவில்லை.

தற்போதும் இரண்டாவது கட்டமாக பிரதான ஜனாதிபதி வேட்பாளர்கள் பேச்சுவார்த்தைக்கு வருமாறு அழைப்பு விடுத்திருக்கின்றனர். அவர்களுடன் மீண்டும் பேசுவதற்குத் தயாராக இருக்கின்றோம்.

ஆகவே, எமது கட்சி தமிழ்ப் பொது வேட்பாளரை ஆதரிப்பது என்ற முடிவு ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பொது வேட்பாளரின் அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பில் கலந்துரையாடவுள்ளோம். என அவர் தெரிவித்துள்ளார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here