ஜனாதிபதிகளின் வரப்பிரசாதங்களை (ரத்து செய்தல்) சட்டமூலம் நேற்று (10) பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதையடுத்து, முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ இல்லங்கள் மீண்டும் அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்பட வேண்டும்.
தற்போது முன்னாள் ஜனாதிபதிகள் மஹிந்த ராஜபக்ஷ, மைத்திரிபால சிறிசேன மற்றும் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆகியோர் உத்தியோகபூர்வ இல்லங்களைப் பயன்படுத்தி வருகின்றனர். எனினும், புதிய சட்டமூலத்தால் இச்சலுகை அவர்களுக்கு இழக்கப்பட்டுள்ளது.
இதன்படி, மஹிந்த ராஜபக்ஷ இன்று (11) தனது உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து வெளியேறி, ஹம்பாந்தோட்டையில் உள்ள கார்ல்டன் இல்லத்திற்குச் செல்ல உள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செய்தித் தொடர்பாளர் ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.
மேலும், மைத்திரிபால சிறிசேன மற்றும் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆகியோரும் தங்கள் இல்லங்களை அரசாங்கத்திடம் ஒப்படைப்பார்கள் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இல்லங்களை ஒப்படைக்க தவறினால், அதற்கான எழுத்துப்பூர்வ அறிவிப்பு வழங்கப்படும் என்றும் பொது நிர்வாக அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த சட்டமூலத்தின் 2வது வாசிப்பு வாக்கெடுப்பில் 151 வாக்குகள் ஆதரவாகவும், 1 வாக்கு எதிராகவும் பதிவாகி, பெரும்பான்மையுடன் அது நிறைவேற்றப்பட்டது. பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தஸநாயக்க மட்டுமே எதிராக வாக்களித்தார்.








