கிளிநொச்சியில் உள்ள உள்ளுராட்சி மன்றங்களில் கடந்த இரண்டு தடவையும் ஆட்சி அதிகாரத்தில் இருந்தவர்கள் ஊழல்,மோசடிகள் , அதிகார துஸ்பிரயோகங்களை தவிர வேறு எதனையும் செய்யவில்லை, இக் காலகட்டத்தில் மக்களின் வரிப்பணம் வீண் விரையம் செய்யப்பட்டுள்ளது.

எனவே இந்த ஊழல் மோசடிகளில் ஈடுபட்டவர்களுக்கு  வருகின்ற  ஆறாம் திகதி மக்கள் வாக்குகளால் தண்டனை வழங்க வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மு. சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.

கரைச்சி பிரதேச சபைக்கு சங்கு சின்னத்தில் போட்டியிடுகின்ற ஐனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பரந்தன் பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்வில் கருத்துரைத்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்

பிரதேச சபை தேர்தல் மிக முக்கியமானது. உள்ளுர் அபிவிருத்திகளில் பிரதேச சபைகளின் பங்களிப்பு மிக மிக அவசியமானது. உள்ளுர் வீதிகள் புனரமைப்பு, வீதி விளக்குகள், குடிநீர், முன்பள்ளிகள்,   கழிவகற்றல், மயாணங்களை புனரமைத்தல் என மிக அடிப்படையான  உட்கட்டுமான பணிகளை பிரதேச சபைகளே மேற்கொள்கின்றன.  எனவேதான் பிரதேச சபைகளின் அதிகாரத்திற்கு தூய கரங்களை கொண்ட, வினைத்திறனாக செயற்படக் கூடிய,தூர நோக்கு சிந்தனையுள்ள தரப்புக்கள் வரவேண்டும் என நாம் வலியுறுத்தி வருகின்றோம். மக்களும் வாக்களித்து வெற்றிப்பெறச் செய்ய வேண்டும்.

எனவேதான் நாம் மக்களிடம் உரிமையோடு கேட்டுநிற்பது கடந்த இரண்டு தடவைகள் ஏற்பட்ட அனுபவத்தை கொண்டு  இந்த தடவை அத் தரப்பு்ககளை நிராகரித்து புதியவர்களை தெரிவு செய்யுமாறு. கடந்த காலத்தில் அவர்கள் செய்த ஊழல் மோசடிகளுக்கு மக்கள் வாக்குகளால் தண்டனை வழங்க வேண்டும்  இதுவே அவர்களுக்கு ஒரு படிப்பினையும், புதிதாக பொறுப்பேற்கின்றவர்களுக்கு பொறுப்பினையும் ஏற்படுத்தும் எனவும் தெரிவித்தார்.

(கிளிநொச்சி நிருபர்: சிவா)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here