ஆசியாவில் எச்.ஐ.வி பரவல் மிகக் குறைந்த மட்டத்தில் இருக்கும் நாடாக இலங்கையை கருதலாம் என சுகாதார மற்றும் வெகுஜன ஊடக பிரதி அமைச்சர் டாக்டர் ஹன்சகா விஜேமுனி தெரிவித்தார்.
பாலியல் உரிமைகள் தொடர்பான ஐரோப்பிய நாடாளுமன்ற மன்றத்தின் பிரதிநிதிகள் சார்பாக இலங்கை குடும்பக் கட்டுப்பாடு சங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட சிறப்பு நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாட்டின் மக்கள் தொகையுடன் ஒப்பிடும் போது எச்.ஐ.வி.யுடன் வாழும் மக்களின் எண்ணிக்கையை கருத்தில் கொள்ளும்போது மிகக்குறைவாக இருப்பது பாராட்டத்தக்கது என குறிப்பிட்டார்.
மேலும் இதற்கு சுகாதார அமைச்சின் வழிகாட்டலில் இலங்கை தேசிய பாலியல் நோய் மற்றும் எய்ட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்டத்தால் செயல்படுத்தப்படும் சிறப்புத்திட்டங்களும் மற்றும் இலங்கை குடும்பக் கட்டுப்பாட்டு சங்கத்தால் மேற்கொள்ளப்படும் செயல்பாடுகளுமே மிக முக்கியமான காரணிகளாகும் என அவர் தெரிவித்தார்.
இது குறித்து தற்போதைய அரசாங்கத்தால் செயல்படுத்தப்படும் சிறப்பு திட்டத்தை மேலும் வலுப்படுத்த சுகாதார அமைச்சகம் தீவிரமாக பங்களித்து வருவதாகவும் நாட்டில் வாழும் மக்களுக்கு சிறந்த நாட்டை அழகான வாழ்க்கையையும் ஆரோக்கியமான தேசத்தையும் உருவாக்க உறுதிபூண்டுள்ளது எனவும் பிரதி அமைச்சர் தெரிவித்தார்.
அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், இலங்கை குடும்பக் கட்டுப்பாடு சங்கத்தின் அழைப்பின் பேரில் இலங்கைக்கு வந்த ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் குழு மட்டக்கிளப்பு, நுவரெலியா, மற்றும் காலி ஆகிய மாவட்டங்களுக்கு ஐந்து நாள் ஆய்வு சுற்றுப்பயணத்தை மேற்கொண்டது.
இதன் போது இக் குழுவானது பாலியல் ஆரோக்கியம் தொடர்பான பிரச்சினைகள் மற்றும் போக்குகள் குறித்து அந்த பகுதி மக்களுடனும் சுகாதாரத் துறை அதிகாரிகளுடனும் கலந்துரையாடலை மேற்கொண்டனர் என அமைச்சர் தெரிவித்தார்.
பாலியல் உரிமைகள் தொடர்பான ஐரோப்பிய நாடாளுமன்ற மன்றத்தின் பிரதிநிதிகள் சார்பாக இலங்கை குடும்பக் கட்டுப்பாடு சங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட சிறப்பு நிகழ்வில் குடும்பக் கட்டுப்பாடு சங்கத்தின் தலைவர் அருணி மார்சலின், நிர்வாக இயக்குநர் டாக்டர் ருச்சிதா பெரேரா, சங்கத்தின் மூத்த அதிகாரிகள் குழு மற்றும் சுகாதாரத் துறையின் பல்வேறு துறைகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.







