தேசிய அபிவிருத்தி வங்கியில் (NDB) பல பில்லியன் ரூபாய் மோசடி இடம்பெற்றதைத் தொடர்ந்து, வங்கி மேற்பார்வை மற்றும் ஒழுங்குமுறை பொறிமுறைகளை பலப்படுத்துமாறு சர்வதேச நாணய நிதியம் (IMF) மத்திய வங்கியை கேட்டுள்ளதாக பொது நிதி குழு (CoPF) தெரிவித்துள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி (SJB) எம்.பியும் கோப் குழு தலைவருமான டொக்டர் ஹர்ஷ டி சில்வா தலைமையில் கூடிய கோப் குழு, அண்மையில் ஆளுநர் நந்தலால் வீரசிங்க உள்ளிட்ட மத்திய வங்கி அதிகாரிகளுடன் NDB மோசடி தொடர்பில் ஆராய்ந்தது.

மத்திய வங்கி எடுத்துள்ள நடவடிக்கைகளின் முன்னேற்றம் குறித்து டொக்டர் டி சில்வா இதன்போது விசாரித்தார்.

சர்வதேச நாணய நிதியம் தனது 5வது மற்றும் 6வது பணியாளர் மீளாய்வு அறிக்கையில் மத்திய வங்கியின் மேற்பார்வை மற்றும் ஒழுங்குமுறை பங்குகளை பலப்படுத்த வேண்டியதன் அவசியத்தை குறிப்பிட்டிருந்ததை அவர் இதன்போது சுட்டிக்காட்டினார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுபோன்ற பரிவர்த்தனைகளின் மூல காரணம் மற்றும் செயல்முறையை கண்டறிய தடயவியல் தணிக்கை ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மத்திய வங்கி அதிகாரிகள் இதன்போது குறிப்பிட்டுள்ளனர். இது மத்திய வங்கியினால் NDB உடன் இணைந்து மேற்கொள்ளப்படுவதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை குற்றம் சாட்டப்பட்ட தேசிய அபிவிருத்தி வங்கி எவ்வாறு தடயவியல் விசாரணையின் எல்லை நிர்ணயத்தில் ஈடுபட்டது என ஹர்ஷ டி சில்வாவும் கோப் குழு உறுப்பினர் ரவி கருணாநாயக்கவும் கேள்வி எழுப்பினர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கு, தடயவியல் விசாரணையின் எல்லைக்கான முன்வரைவை மாத்திரமே NDB-யிடம் கோரியதாகவும், அதை மத்திய வங்கி தனது உள்ளீடுகளுடன் நிறைவு செய்ததாகவும் அதிகாரிகள் பதிலளித்தனர் என கூறப்பட்டுள்ளது.

ஒரு வாரத்தில் இடைக்கால அறிக்கையும், ஜூலை 18 அன்று இறுதி அறிக்கையும் சமர்பிக்கப்படும் என்று அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

முன்னதாக, மோசடி பரிவர்த்தனைகள் மூலம் வங்கியில் இருந்து ரூ. 13 பில்லியன் கையாடப்பட்டதாக அறிக்கைகள் வெளியாகின.

இதேவேளை பணம் நாட்டை விட்டு வெளியே அனுப்பப்பட்டதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால கடந்த வாரம் பாராளுமன்றத்தில் கூறினார் என்பது குறிப்பிடக்கத்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here