இலங்கை அஞ்சல் துறையின் ‘எல்ல’ அஞ்சல் நிலையத்தின் சுற்றுலாபயணிகளுக்கான இல்லம் (Tourist House) மற்றும் முத்திரை அலுவலகம் சமீபத்தில் திறக்கப்பட்டது.
இதன் திறப்பு விழா சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ தலைமையில், 151வது உலக தபால் தின நிகழ்வுடன் இணைந்து நடைபெற்றது.
இந்த இரண்டு திட்டங்களும் தபால் துறைக்கு வருவாய் ஈட்டும் திட்டங்களாகும், மேலும் தபால் துறையின் வருமானத்தை அதிகரிப்பது பிரதான நோக்கமாகும்.
அத்துடன், நாட்டின் சுற்றுலா துறையின் வளர்ச்சிக்கு இலங்கை தபால் துறையும் பங்களிக்க முடியும், எதிர்காலத்தை வலிமையுடன் எதிர்கொள்ள நேர்மறையான மாற்றம் தேவை என டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
சுற்றுலாபயணிகளுக்கான இல்ல திறப்பு நிகழ்வு, வெளிநாட்டு மற்றும் உள்ளூர் சுற்றுலாபயணிகளுக்கான நினைவு முத்திரைகள் விற்பனை, சுற்றுலா இல்லத்தின் முதல் முன்பதிவுகள் தொடக்கம் இவை அனைத்தும் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸவின் தலைமையில், தபால் மா அதிபர் திரு. ருவன் சத்குமாரவின் பங்கேற்புடன் நடைபெற்றன.
2018 ஆம் ஆண்டு திறக்கப்பட்ட ‘எல்ல’ தபால் நிலையத்தின் மேல் தளம், தபால் அதிபரின் உத்தியோகபூர்வ தங்குமிடமாக பயன்பட்டிருந்தது.
தற்போது ரூ. 4.5 மில்லியன் செலவில் உல்லாச பயணிகளுக்கான தங்குமிட இல்லமாக மாற்றப்பட்டுள்ளது. முழுமையாக புதுப்பிக்கப்பட்ட தளம், தேவையான வசதிகளுடன், 2025 ஆம் ஆண்டில் தபால் நிலையத்திற்கு வருவாய் ஈட்டும் இடமாக உருவாக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது ‘எல்ல’ என்பது சுற்றுலாபயணிகளை கவரும் முக்கிய சுற்றுலா தளமாக மாறியுள்ளது.
பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திர பண்டார, துணை தபால் மா அதிபர்கள் ப்ரேமச்சந்திர ஹேரத், துசித ஹுலங்கமுவ, சமீஷா டி சில்வா, மற்றும் இலங்கை தபால் துறையின் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.







