வரவிருக்கும் கல்விச் சீர்திருத்தங்களின் கீழ், தரம் 1 முதல் 6 ஆம் வகுப்பு மாணவர்களின் பாடசாலை நேரம் காலை 7.30 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நீடிக்கப்படவுள்ளதாக கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதனால் மாணவர்களின் போக்குவரத்துக்குத் தேவையான மாற்றங்கள் தொடர்பாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர்ப்புற அபிவிருத்தி அமைச்சுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், சம்பந்தப்பட்ட தரப்பினருடன் ஏற்கனவே முதற்கட்ட கலந்துரையாடல்கள் நடைபெற்றுள்ளதாகவும், எதிர்காலத்தில் மற்றொரு சுற்று கலந்துரையாடலும் நடைபெறும் என்றும் அமைச்சின் செயலாளர் நலகா கலுவேவா குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:
“இது குறித்த தேவையான தகவல்களை நாங்கள் ஏற்கனவே வழங்கியுள்ளோம். போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர்ப்புற அபிவிருத்தி அமைச்சு தற்போது நிலைமையை மீளாய்வு செய்து வருகிறது. புதிய பாடசாலை அட்டவணை அமுலுக்கு வந்தவுடன் போக்குவரத்து ஏற்பாடுகள் தொடர்பான தேவைகளை நாங்கள் தெரிவிப்போம் என குறிப்பிட்டார்.
மேலும் திருத்தப்பட்ட பாடசாலை அட்டவணை 50 நிமிட நீண்ட பாடவேளைகளை அறிமுகப்படுத்துகிறது.
இதன் நோக்கம், கொவிட்-19 போன்ற தொற்றுநோய்கள் காரணமாக இழந்த கல்வி நேரத்தை ஈடுசெய்வதும், மாணவர்களுக்கு மேம்பட்ட கற்றல் சூழலை வழங்குவதும் ஆகும்.







