எழுவைதீவு மக்களின் கோரிக்கைகள் விரைவில் நிறைவேற்றப்படும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் உறுதி அளித்தார்.
எழுவைதீவு மக்கள் குறைகேள் சந்திப்பு எழுவைதீவு விளையாட்டுக்கழக மைதானத்தில் நேற்று வியாழக்கிழமை மாலை (07.08.2025) நடைபெற்றது. இதன் போதே அவர் இவ்வாறு உறுதியளித்தார்.
இந்நிகழ்வில், எழுவைதீவில் பரீட்சை மண்டபம் அமைத்தல், ஆரம்ப சுகாதார நிலையத்தை மேம்படுத்தல், நன்னீர் கிணறுகள் மற்றும் வீதிகள் புனரமைத்தல், குடிநீர் விநியோகம், மற்றும் கலையரங்கம் இல்லாத குறைபாடு உள்ளிட்ட பல்வேறு தேவைகள் தொடர்பில் மக்கள் மனமுவந்தனர். மேலும் கருவேலை மரங்கள் காரணமாக பனை மரங்கள் அழிவடைந்துவிடும் நிலை ஏற்பட்டுள்ளதால், அதனை அகற்றும் இயந்திரங்கள் வழங்குமாறு கோரினர்.
கடற்றொழிலாளர்களுக்கான வசதிகளும் முக்கிய கோரிக்கைகளாக முன்வைக்கப்பட்டது. குறிப்பாக, மீன்களைப் பாதுகாக்க ஐஸ் உற்பத்தி உபகரணங்கள், நங்கூரமிடும் இறங்குதுறை, கடலரிப்பைத் தடுக்க தடுப்பணை அமைத்தல் மற்றும் கடல் நீரை எழுவைதீவிலேயே சுத்திகரிக்கும் திட்டம் போன்றவை பற்றிய கோரிக்கைகளுக்கு அதிகாரிகளால் நியாயமான பதில்கள் வழங்கப்பட்டன.
ஆசிரியர் பற்றாக்குறை, போக்குவரத்துச் சேவைகள் இல்லாமை, பாடசாலைச் சூழலில் நீர் தேங்கல் போன்ற பிரச்சனைகளும் மக்கள் முன்வைத்த முக்கிய விஷயங்களாகும். இவை தொடர்பாக சம்பந்தப்பட்ட துறைகள் உடனடி நடவடிக்கை எடுக்க ஆளுநர் அதிகாரிகளை பணித்தார். குறிப்பாக வலயக் கல்விப் பணிப்பாளருக்கு ஆசிரியர் நியமனத்தை விரைவாகச் செய்வதற்கான பணிப்பும் வழங்கப்பட்டது.
இந்த சந்திப்பில் மாகாணத்திற்குட்பட்ட பல திணைக்களங்களின் பிரதிநிதிகள் மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். மக்கள் மனவுரைகளை நேரில் கேட்டு, தேவையான தீர்வுகளை வகுப்பதற்கான முயற்சியாக இச்சந்திப்பு அமைந்தது. மக்கள் முன்வைத்த கோரிக்கைகள் நிலைப்படுத்தப்பட்டு, அவற்றுக்கு நிலையான தீர்வுகள் உறுதி செய்யப்படும் என ஆளுநர் இறுதியாக உறுதியளித்துள்ளார்.


(யாழ் நிருபர்- லோஜன் விஜய்குமார்)








