ஐக்கிய மக்கள் சக்தி (SJB) நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் விதான தனது உயிருக்கு அச்சுறுத்தல்கள் இருப்பதாகக் தெரிவித்தார்.

இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய ஜகத் விதான இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்துமாறு களுத்துறை டிஐஜிக்கு ஐஜிபி அறிவித்துள்ளதாகவும் அவர் கூறினார்.

இச் சம்பவம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் விதான தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

“வாகனத்தில் இருந்து இறங்கும்போது என்னை படுகொலை செய்ய திட்டமிட்டுள்ளதாக ஐஜிபியின் கடிதம் மூலம் டிஐஜிக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்தேக நபரின் பெயரும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. நான் சுட்டுக் கொல்லப்படுவேன் என்று அதில் கூறப்பட்டுள்ளது,” என்று அவர் கூறினார்.

இந்த விவகாரம் குறித்து விசாரிக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அவர் நாடாளுமன்றத்தையும் அரசாங்கத்தையும் கேட்டுக்கொண்டார்.

அவரது முறையீட்டிற்கு பதிலளித்த துணை சபாநாயகர் ரிஸ்வி சாலிஹ்,

இந்த விடயம் சபாநாயகரின் கவனத்திற்குக் கொண்டுவரப்படும் என்றும், சபாநாயகரிடம் தனது கோரிக்கையை எழுத்துப்பூர்வமாக முன்வைக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் விதானவிடம் தெரிவித்தார்.

இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச,

இது ஒரு தீவிரமான பிரச்சினை என்றும், ஏனெனில் இது ஒரு நாடாளுமன்ற உறுப்பினரின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும் “வெலிகம பிரதேச சபைத் தலைவர் காவல்துறையினரிடம் கோரிக்கை விடுத்த போதிலும், அவருக்குத் தேவையான பாதுகாப்பு வழங்கப்படாததால் சுட்டுக் கொல்லப்பட்டார். நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கும் பாதுகாப்பு இல்லை. பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதே போன்ற சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இது நகைச்சுவையல்ல. ஒருவர் கொல்லப்பட்டால் என்ன செய்ய முடியும்? வெலிகம சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டும்,” என்று அவர் கூறினார்.

மேலும், நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் விதானவின் கோரிக்கையை நாடாளுமன்றம் கவனத்தில் கொண்டு, அவருக்குத் தேவையான பாதுகாப்பை வழங்க வேண்டும் என்றும் சஜித் பிரேமதாச கேட்டுக் கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here