அதிக சத்தத்துடன் ஒலிற செய்து பொதுமக்களுக்கு தொந்தரவு ஏற்படுத்தினால் ஒலிபெருக்கி மற்றும் ஆம்பிளிஃபயர் போன்ற உபகரணங்கள் பறிமுதல் செய்யப்படும் என இலங்கை பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுவாக இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ஒலிபெருக்கி பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளதோடு அனுமதி பெறப்பட்டால் மாத்திரம் திங்கள்-வியாழன் இரவு 10 வரை, வெள்ளி-சனி இரவு 1 வரை, ஞாயிறு நள்ளிரவு 12:30 வரை பயன்படுத்தலாம்.
இதேவேளை பொதுமக்களுக்கு தொந்தரவு ஏற்படுத்தும் வகையில் பயன்படுத்துவது தண்டனை சட்ட கோவை 261 பிரிவின் கீழ் குற்றம் எனவும் முறைப்பாடு கிடைக்கப்பெற்றால் உடனடியாக அதனை நிறுத்தவும் மீறினால் உபகரணத்தை பறிமுதல் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குழந்தைகள், பாடசாலை மாணவர்கள், முதியவர்கள் மற்றும் நோயாளிகளின் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சட்டவிரோதமான அதிக சத்தம் தொடர்பில் 118 அல்லது 119 அவசர இலக்கங்கள் மூலம் முறைப்பாடு செய்யுமாறும் பொதுமக்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.








