கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த மருத்துவமனையின் உள்கட்டமைப்பு மேம்பாட்டின் ஒரு பகுதியாக, ரூ.150 மில்லியன் செலவில் புதிய மருத்துவமனை கட்டிட தொகுதி மற்றும் கட்டண வார்டு வளாகம் பொதுமக்களுக்கு நேற்று (18) திறந்து வைக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் புதிய கட்டிடங்களும், பிசியோதெரபி பிரிவும் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் உத்தியோகபூர்வமாக திறக்கப்பட்டன.
4 மாடிகள் கொண்ட புதிய கட்டிடத்தில்: தரை தளத்தில்: பிசியோதெரபி பிரிவு
1 மற்றும் 2வது தளங்களில்: கட்டண வார்டுகள் மேல் தளத்தில்: கேட்போர் கூடம் மற்றும் இயக்குநர் அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த கட்டுமான பணிக்கு மத்திய பொறியியல் ஆலோசனை பணியகம் (CECB) ஆலோசனை சேவைகளை வழங்கியுள்ளது.
இந்நிகழ்வில் கலந்துகொண்ட அமைச்சர்,
மருத்துவமனை ஊழியர்களின் முயற்சியை பாராட்டி, எதிர்காலத்திலும் தேவையான வளங்கள் கட்டம் கட்டமாக வழங்கப்படும் என உறுதியளித்தார். இலவச சுகாதார சேவை திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்றும், மாகாண சபை கட்டுப்பாட்டிலுள்ள மருத்துவமனைகளுக்கும் தேவையான அபிவிருத்திகள் முன்னெடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
இந் நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜெயந்த லால் ரத்னசேகர, நாடாளுமன்ற உறுப்பினர் ஏ. அத்தம்பா, தேசிய மக்கள் சக்தி அமைப்பாளர் ஜி. வசந்த பியதிஸ்ஸ, மருத்துவ அத்தியட்சகர் டாக்டர் ஐ.எல்.எம். ரிபாஸ் என பலர் கலந்துகொண்டனர்.








