கல்கமுவ பகுதியில் சுற்றித் திரியும் “கவந்திஸ்ஸ” எனப்படும் யானையின் முன் வலது காலில் ஏற்பட்டுள்ள காயத்திற்கு வனவிலங்கு அதிகாரிகள் அவசர கால்நடை சிகிச்சையை ஆரம்பித்துள்ளனர்.
காயமடைந்த காலுக்கான ஆரம்ப சிகிச்சை இன்று (24) நிகவெரட்டிய கால்நடை பிரிவின் கால்நடை அறுவை சிகிச்சை நிபுணர் அதசூரியவின் மேற்பார்வையில் ஆரம்பிக்கப்பட்டது.
குறித்த யானை சுற்றித் திரியும் உஸ்கல சியம்பலங்கமுவ வாவியைச் சுற்றியுள்ள பகுதியில் வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்தின் விசேட குழு ஒன்று இன்று காலை நடவடிக்கை ஒன்றை ஆரம்பித்ததாக சுற்றுச்சூழல் அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த நடவடிக்கையில் கால்நடை அறுவை சிகிச்சை நிபுணர்கள், வனவிலங்கு அதிகாரிகள் மற்றும் விசேட மருத்துவ குழுக்கள் தலைமையிலான விசேட வனவிலங்கு குழு ஈடுபட்டது.
இதற்கமைய கவந்திஸ்ஸவின் தற்போதைய நிலையை மதிப்பிட்ட பின்னர், அதன் முன் வலது காலில் உள்ள காயத்திற்கு கவனம் செலுத்தி தேவையான சிகிச்சைகளை குழுக்கள் மேற்கொண்டு வருகின்றன.
சுற்றுச்சூழல் அமைச்சர் தம்மிக்க படபெந்தி மற்றும் அமைச்சின் செயலாளரின் தலையீட்டுடன் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது, அதே நேரத்தில் கால்நடை பிரிவு பணிப்பாளர் வைத்தியர் கங்காவின் அறிவுறுத்தலின் பேரில் கால்நடை குழுக்கள் செயல்படுகின்றன.
யானையின் உடல்நலம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக தேவையான அனைத்து கால்நடை நடவடிக்கைகளும் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருவதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
சிகிச்சை தொடரும் நிலையில் வனவிலங்கு அதிகாரிகள் மற்றும் கால்நடை குழுக்கள் கவந்தீஸவை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.








