இலங்கை காவல்துறை சேவைக்கு 10,000 புதிய அதிகாரிகளை இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார்.
இன்று (29) நடைபெற்ற ஊவா மாகாண பிரதி காவல்துறை மா அதிபர் அலுவலக திறப்பு விழாவில் கலந்து கொண்டு காவல்துறை மா அதிபர் இதனை குறிப்பிட்டார்.
அங்கு மேலும் கருத்து தெரிவித்த காவல்துறை மா அதிபர், தற்போது மனித வளம் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் போதுமானதாக இல்லை என்பது தொடர்பாக ஜனாதிபதி மற்றும் அமைச்சருக்கு தெரியப்படுத்தியதை அடுத்து, காவல்துறை சேவைக்கு 10,000 பேரை இணைக்க அனுமதி கிடைத்ததாக கூறினார்.
அத்துடன் தற்போது காவல்துறை சேவையில் 38,000 அதிகாரிகளுக்கு பற்றாக்குறை உள்ளதாகவும், அந்த பற்றாக்குறையுடன் சேவையை தொடர வேண்டியுள்ளதாகவும் காவல்துறை மா அதிபர் தெரிவித்தார்.
மேலும் ஒவ்வொரு வருடமும் காவல்துறை சேவையில் இருந்து ஓய்வு மற்றும் வேறு காரணங்களால் சுமார் 2,000 பேர் வெளியேறுவதாகவும் காவல்துறை மா அதிபர் மேலும் குறிப்பிட்டார்.








