நேபாளத்தில் ஏற்பட்டுள்ள கடுமையான வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு உதவும் வகையில், அடுத்த சில நாட்களில் இலங்கையிலிருந்து அனர்த்த நிவாரண குழுக்களை அனுப்ப அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக பிரதி பாதுகாப்பு அமைச்சர் அருண ஜயசேகர தெரிவித்தார்.
அனுராதபுரத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், இலங்கையின் பாதுகாப்பு படையினரை உள்ளடக்கிய நிவாரண குழுக்களை அனுப்ப அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும், எனினும் குழுக்களின் அளவு மற்றும் அமைப்பு தொடர்பான கலந்துரையாடல்கள் இன்னும் நடைபெற்று வருவதாகவும் கூறினார்.
“அங்குள்ள தேவைகளுக்கு ஏற்ப நிவாரண குழுக்களை எவ்வாறு அனுப்ப வேண்டும் என்பது குறித்து நாங்கள் இன்னும் திட்டமிட்டு வருகிறோம். பணியாளர்களின் எண்ணிக்கை மற்றும் அனுப்பப்படவுள்ள குழுக்களின் வகை இன்னும் முடிவு செய்யப்படவில்லை” என்று அவர் மேலும் தெரிவித்தார்.
அடுத்த சில நாட்களுக்குள் இதற்கான ஏற்பாடுகள் முடிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
அத்துடன், இந்த அனர்த்தத்தை அடுத்து நேபாளத்திற்கு 1 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவி வழங்குவதற்கான ஆரம்ப ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
“நேபாளத்தில் நடந்த சம்பவம் துரதிர்ஷ்டவசமானது. ஜனாதிபதியும் தனது இரங்கலை தெரிவித்துள்ளார்” என்று அவர் குறிப்பிட்டார்.
அருகிலுள்ள தெற்காசிய நாடான இலங்கை, இந்த நெருக்கடியான காலத்தில் நேபாளத்திற்கு உணர்வுப்பூர்வமாக செயற்பட்டு உதவிகளை வழங்கும் என்றும் பிரதி அமைச்சர் அருண ஜயசேகர தெரிவித்தார்.








