நேபாளத்தைத் தாக்கிய பேரழிவு வெள்ளத்தில் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படும் 7 பேரின் சடலங்கள் இந்திய ஆறுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
நேபாளத்தின் தெற்கே உள்ள சிட்வான் பகுதியை ஒட்டி அமைந்துள்ள இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலத்தின் மஹராஜ்கஞ்ச் மற்றும் குஷிநகர் மாவட்டங்கள் வழியாக ஓடும் ஆறுகளில் இந்த சடலங்கள் மிதந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.
நேபாளத்தில் ஏற்பட்ட எதிர்ப்பாராத வெள்ளத்தின் காரணமாக இந்த சடலங்கள் இந்தியா நோக்கி அடித்து வரப்பட்டிருக்கலாம் என்று மஹராஜ்கஞ்ச் மாவட்ட ஆட்சியர் கௌரவ் சிங் சோகர்வால் சர்வதேச ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.
கடந்த வியாழக்கிழமை அன்று மஹராஜ்கஞ்ச் மாவட்டத்தில் அடையாளம் தெரியாத 4 சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அதிலிருந்து சுமார் 70 கிலோமீட்டர் கீழே உள்ள குஷிநகர் மாவட்டத்தில் மேலும் 3 சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக காவல்துறை தெரிவித்தது.
இந்த சடலங்கள் யாருடையவை என்பதை அடையாளம் காண அதிகாரிகள் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த வெள்ளப் பேரிடரில் இதுவரை 584 பேர் உயிரிழந்துள்ளனர். நேபாளம் மற்றும் சீனாவின் திபெத் முழுவதும் 2,400 க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர்.
இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த 7 சடலங்கள் இன்னும் அதிகாரப்பூர்வ உயிரிழப்பு எண்ணிக்கையில் சேர்க்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.








