பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவினால் தமக்கு எதிராக நாடாளுமன்ற சிறப்புரிமை மீறல் பிரேரணை ஒன்றை சமர்ப்பித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார்.

2026ஆம் ஆண்டுக்கான பாதீட்டின் இரண்டாம் வாசிப்பு மீதான முதல் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், குறித்த குற்றச்சாட்டைத் தெளிவாக மறுத்ததுடன், தமது அரசியல் நடவடிக்கைகள் அனைத்தும் பொதுநலனையும் மக்கள் நலனையும் மையமாகக் கொண்டவை என வலியுறுத்தினார்.

“எனது கட்சிக்காகவோ அல்லது தனிநபர் அழுத்தத்துக்காகவோ நான் எந்த முடிவையும் மாற்றிக் கொண்டதில்லை. எந்தவித வெளிப்புற அழுத்தமும் என்மீது பிரயோகிக்கப்படவில்லை, பிரயோகிக்கவும் முடியாது என்பதைக் கடந்த ஓராண்டு காலமாக நிரூபித்துள்ளேன்,” என்று ஸ்ரீதரன் குறிப்பிட்டார்.

அத்துடன், சிவில் புத்தி பெரமுன எனப்படும் அமைப்பைச் சேர்ந்த ஒருவரால், தாம் சொத்துக்கள் குவித்து வைத்திருப்பதாக நிதி குற்றப்புலனாய்வு பிரிவில் (FCID) கடந்த ஜூலை மாதம் முறைப்பாடு செய்யப்பட்டதாகவும், அந்த குற்றச்சாட்டில் இதுவரை எந்தவித முடிவும் எட்டப்படவில்லை என்றும் தெரிவித்தார்.

“எனது பெயரிலோ, எனது குடும்ப உறுப்பினர்களின் பெயரிலோ சொத்துக்கள் இருந்தால் விசாரணை செய்து சட்டநடவடிக்கை எடுக்குமாறு நான் பகிரங்கமாகக் கோருகிறேன். மதுபானசாலைகளுக்கான அனுமதிப் பத்திரங்கள் எனது சிபாரிசில் வழங்கப்பட்டிருந்தால் அதையும் வெளிப்படுத்தி நடவடிக்கை எடுக்கட்டும்,” எனவும் அவர் தெரிவித்தார்.

மேலும், ஊவா மாகாணத்தின் முதலமைச்சராக இருந்த காலத்தில் சாமர சம்பத் தசநாயக்க, ஒரு தமிழ் பெண் அதிபரை அவமானப்படுத்தியதாகக் குற்றஞ்சாட்டிய அவர்,

“அவர் ஒருமுறை ஒரு தமிழ் பெண் அதிபரை முழங்காலில் இருத்தி வைத்து விசாரித்த மனநோயாளி. இதை நான் பதிவு செய்ய விரும்புகிறேன்,” என்று கடுமையாக விமர்சித்தார்.

தம்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் தாம் பதவியிலிருந்து விலகத் தயாராக இருப்பதாகவும் ஸ்ரீதரன் முடிவில் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here