இலங்கையின் குற்றப் புலனாய்வுத் துறை (CID), வெளிநாட்டுக் கடன் செலுத்துதல் தொடர்பான மின்னஞ்சல் மோசடி வழக்கில், திறைசேரி நிதியிலிருந்து 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் முறைகேடாகப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் குறித்து விசாரணைகள் நடைபெற்று வருவதாக கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.
இலங்கையின் வெளிநாட்டுக் கடன் சேவை நடைமுறையின் ஒரு பகுதியாகச் செலுத்தப்பட்ட இந்தப் பணம்,அவுஸ்திரேலியாவின் ஏற்றுமதி நிதி முகமையின் மின்னஞ்சலைப் போன்ற ஒரு மோசடி மின்னஞ்சல் மூலம் மூன்றாம் தரப்பினருக்குத் அனுப்பட்டுள்ளதாக அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
நீதிபதி இசுரு நெத்திகுமாரவுக்கு அறிக்கை சமர்ப்பித்த குற்றப் புலனாய்வுத் துறை, முக்கிய விபரங்கள் அடங்கிய 27 பக்க அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும், விசாரணையின் தன்மையைக் கருத்தில் கொண்டு அதனைப் பாதுகாப்பாக வைக்குமாறும் கோரியுள்ளது.
மார்ச் 24, 2026 அன்று அளிக்கப்பட்ட முறைப்பாட்டுக்கமைய இந்தச் சம்பவம் ஆராயப்படுகிறது. குறித்த நிதியானது, அரச கடன் முகாமைத்துவ அலுவலகம் வழியாக அவுஸ்திரேலிய அரசாங்கத்துடன் தொடர்புடைய ஒரு நிறுவனத்திற்கு உத்தியோகபூர்வமாகச் செலுத்தப்பட வேண்டியதாகும்.
இருப்பினும், உண்மையான டொமைனைப் போலவே தோற்றமளிக்கும் ஒரு மோசடி மின்னஞ்சல், பணம் செலுத்துவதற்கான வழிமுறைகளை அனுப்பப் பயன்படுத்தப்பட்டிருந்தது. அசல் டொமைனான “exportfinance.gov.au” என்பது “exportfinance.av.com” என மாற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது, இதனால் மேலதிக சரிபார்ப்பு இன்றி பணப் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
வெளிநாட்டு வளங்கள் திணைக்களம் அல்லது அது தொடர்பான நிறுவனங்களின் மின்னஞ்சல் அமைப்புகளில் ஏதேனும் அங்கீகரிக்கப்படாத அணுகல் இருந்ததா என்பதை ஆராய்ந்து வருவதாக குற்றப் புலனாய்வுத் துறை (CID) அதிகாரிகள் தெரிவித்தனர்.
மின்னஞ்சல் சேவையகங்களை நிர்வகிக்கும் இலங்கை நிறுவனத்திடம் மேற்கொள்ளப்பட்ட ஆரம்பகட்ட சோதனைகள், பாதுகாப்பு மீறலை இன்னும் உறுதிப்படுத்தவில்லை, இருப்பினும் மேலதிக தடயவியல் பகுப்பாய்வு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்த அமைப்பு தினமும் சுமார் 15,000 மின்னஞ்சல்களைச் செயற்படுத்துவதால், சாத்தியமான ஊடுருவல்களைக் கண்டறியும் முயற்சிகள் சிக்கலாகியுள்ளன என்று புலனாய்வாளர்கள் குறிப்பிட்டனர்.
சந்தேகத்திற்கிடமான டொமைன் மாற்றம் குறித்து முன்னரே எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த போதிலும், எச்சரிக்கை விடுக்கப்பட்ட பின்னரே பணம் செலுத்தப்பட்டுள்ளது என்றும் அவர்கள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
இத்தகைய பரிவர்த்தனைகளுக்கான வழக்கமான சரிபார்ப்பு நடைமுறைகள், நிதி விடுவிக்கப்படுவதற்கு முன்பு மேலதிக உறுதிப்படுத்தல் வழிமுறைகள் எதுவும் இல்லாமல், முதன்மையாக மின்னஞ்சல் தகவல் தொடர்பையே சார்ந்திருப்பதாகத் தெரிகிறது என்றும் நீதிமன்றத்திற்கு மேலும் தெரிவிக்கப்பட்டது.
அவுஸ்திரேலிய நிறுவனத்தின் அமைப்புகள் ஊடுருவப்பட்டிருக்கக்கூடுமா என்பது குறித்தும் விசாரணைகள் நடைபெற்று வருவதாக குற்றப் புலனாய்வுத் துறை (CID) தெரிவித்துள்ளது. இன்டர்போல் மற்றும் அவுஸ்திரேலிய காவல்துறை உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளிடமிருந்து உதவி கோரப்பட்டு வருகிறது.
இதுவரை எந்த சந்தேகநபர்களின் பெயரும் வெளியிடப்படவில்லை. இருப்பினும், மின்னஞ்சல் பரிமாற்றங்களுடன் நேரடியாக தொடர்புடையவர்கள் என்று நம்பப்படும் ஐந்து நபர்களுக்கு பயணத் தடை விதிக்கவும், அவர்களின் வங்கிக் கணக்குகளை ஆய்வு செய்ய அனுமதி கோரவும் குற்றப் புலனாய்வுத் துறை கோரிக்கை விடுத்துள்ளது.
நீதிமன்றம் இந்தக் கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டதுடன், இலங்கை கணினி அவசரகால ஆயத்தக் குழு (SLCERT), அரசாங்கப் பகுப்பாய்வாளர் திணைக்களம் மற்றும் கொழும்புப் பல்கலைக்கழகத்தின் கணினியியல் பீடம் ஆகியவற்றின் நிபுணர்களைக் கொண்ட ஒரு தொழில்நுட்பக் குழுவின் நியமனத்திற்கும் அனுமதி அளித்தது.
இதன்போது,குற்றவியல் குற்றம் நிகழ்ந்துள்ளதா என்பதைத் தீர்மானிக்கவும், பொறுப்பானவர்களை அடையாளம் காணவும், எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க அவசரகால நடவடிக்கைகளை எடுக்கவும் நீதிபதி இசுரு நெத்திகுமார புலனாய்வாளர்களுக்கு அறிவுறுத்தினார்.
இந்த வழக்கு மேலதிக விசாரணைகளுக்காக எதிர்வரும் ஜூன் 3 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.







